கடலுக்குப் போன மீனவர்கள் நிலை என்ன? தத்தளிக்கும் கன்னியாகுமரி

கன்னியாகுமரி கடலில் மீன்பிடிக்கச் சென்ற டஜன் கணக்கான மீனவர்கள் ஒக்கிப் புயலால் சீற்றத்துடன் உள்ள கடலில் சிக்கிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், காணாமல் போனவர்கள் எண்ணிக்கையோ நிலையோ, இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இதனிடையே, கடற்படை கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், மீட்புப் பணிகள் குறித்து மீனவர்கள், மீனவர் அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

பிபிசியிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான் கடந்த இரண்டு நாள்களில் 203 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதுவரை 8 பேர் இறந்துள்ளதாகக் கூறும் ஆட்சியரிடம் இன்னும் கடலில் உள்ள மீனவர்கள் எண்ணிக்கை குறித்து தெளிவான எண்ணிக்கை இல்லை.

"காணாமல் போன மீனவர்கள் குறித்து மீனவர் குடும்பங்களிடம் அரசு கணக்கெடுக்கவில்லை, இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் புயல் வருகிறது என்பது பற்றி போதிய அளவில் அரசு முன்னெச்சரிக்கை செய்யவில்லை. இதுவரை, காணாமல் போன மீனவர்கள் குறித்து விசாரிக்க தகவல் மையம் அமைக்கப்படவில்லை," என்று பிபிசியிடம் தெரிவித்தார் 'தெற்காசிய மீனவர் தோழமை' அமைப்பின் பொதுச் செயலாளர் அருட்தந்தை சர்ச்சில்.

Image caption ஒக்கிப் புயலினால் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் லட்சத்தீவில் கரை ஒதுங்கிய படகு.

கேரளாவில் உள்ள இந்திய கடற்படைக் கப்பல் 13 மீனவர்களை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்த்துள்ளதைக் குறிப்பிட்ட அவர் தமிழகத்தில் உள்ள கடற்படை இப்படி ஏன் செயல்படவில்லை என்றும் கேட்டுள்ளார்.

ஒக்கிப் புயலின் காரணமாக மழை பெய்வது சனிக்கிழமை நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாக பாதிக்கப்பட்ட மின்சார வசதி இன்னும் மீட்கப்படவில்லை என்கிறார் அங்கு சென்றுள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன்.

மாவட்டத்தில் பல இடங்கள் சாலைகளில் மரங்கள் விழுந்திருப்பதாலும், தண்ணீர் தேங்கியிருப்பதாலும் சாலைப் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறும் அவர் குறிப்பாக நாகர்கோயில் பகுதி தனித்தீவாகவே இருப்பதாகக் கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்