ஜெயலலிதாவுக்குப் பிந்தைய அ.தி.மு.க: குமுறும் எரிமலை

ஜெயலலிதா படத்தின் காப்புரிமை Getty Images

தனது அரசியல் வாரிசையோ, அடுத்த கட்டத் தலைவர்களையோ அடையாளம் காட்டாமல் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், மாநில அரசும் ஆளும் கட்சியும் சரியான தலைமையின்றி தவிக்கின்றன. அதிகாரத்திற்கான போட்டி தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.

நினைவிழந்த நிலையில் செப்டம்பர் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. முதலமைச்சரின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மாநில அரசு நிர்வாகம் உடனடியாக வேறு ஒரு மூத்த அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அந்த நிலையிலும் அரசு தொடர்பான முடிவுகளை ஜெயலலிதாவே எடுப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. வாழ்வின் இறுதி நாட்களில்கூட, இந்த விவகாரம் குறித்து ஜெயலலிதா முடிவெடுக்காததே அக்கட்சி தற்போது எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களுக்கு முக்கியக் காரணம்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சுமார் 20 நாட்களுக்குப் பிறகு, அரசு தொடர்பான முடிவுகளை யார் எடுப்பது என ஊடகங்களில் தொடர்ச்சியாக விமர்சனங்கள் வெளியான நிலையில், நிதியமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் முதல்வரின் பொறுப்புகளைக் கவனித்துக்கொள்வார் என அக்டோபர் 11ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கு முன்பும் இரண்டு முறை முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் இருந்திருக்கிறார் என்பதால், இந்த அறிவிப்பு பொருத்தமானதாகவே இருந்தது. டிசம்பர் 5ஆம் தேதியன்று ஜெயலலிதா காலமான நிலையில், சில மணிநேரங்களிலேயே புதிய முதல்வராகப் பதவியேற்றார் ஓ. பன்னீர்செல்வம்.

ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகள் மிக விரைவாக முடிவடைந்த நிலையில், பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளில் பெருத்த மாற்றம் தென்பட்டது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நடந்திருக்காத பல காட்சிகள் அதற்குப் பிறகு நடக்க ஆரம்பித்தன.

முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் உடனடியாக நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றும் தோற்றத்தை ஏற்படுத்தினார். குறிப்பாக வார்தா புயல் சென்னையைப் புரட்டிப்போட்டபோது பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நேரில் வந்து பார்வையிட்டது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. சரளமாக ஊடகங்களிடமும் பேச ஆரம்பித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த வரவேற்பு கட்சியை அப்போது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சசிகலா தரப்பிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக கட்சியைக் கட்டுப்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டன. பொதுக்குழுவைக் கூட்டிய சசிகலா, தன்னைக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்க வைத்தார்.

கட்சி அலுவலகத்திற்கு வந்து டிசம்பர் மாத இறுதியில் சசிகலா நிகழ்த்திய உரை, ஆட்சியதிகாரத்தை நோக்கி அவர் நகர்வதைக் காட்டியது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை சசிகலாவின் குரலை யாருமே கேட்டதில்லை.

இந்த நகர்வுகள் குறித்து ஓ. பன்னீர்செல்வம் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், கட்சிக்குள் பன்னீர்செல்வத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமடைந்தன. ஒருகட்டத்தில் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்யவைக்கப்பட்டார்.

இதற்குப் பிறகு கட்சியும் ஆட்சியும் பெரும் குழப்பத்திற்குள் விழுந்தன. சசிகலாவின் வீழ்ச்சியும் இந்தப் புள்ளியில் துவங்கியது.

ஒரு புறம், தர்மயுத்தம் என்ற பெயரில் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருடன் பிரிந்துசெல்ல, கூவத்தூரில் மீதமிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை ஒன்று சேர்த்த சசிகலா தன்னை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென ஆளுநரிடம் கோரினார்.

ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ய, எடப்பாடி கே. பழனிச்சாமியை முதல்வராக்கினார் அவர்.

இதற்குப் பிறகு சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன் தன்னை முன்னிறுத்த முயற்சித்த நிலையில், கட்சியின் பெயரும் சின்னமும் முடக்கப்பட்டன.

1972ல் துவக்கப்பட்ட அ.தி.மு.க. இதுபோன்ற சிக்கலை எதிர்கொள்வது இது முதல்முறையல்ல. 1987 டிசம்பரில் அப்போதைய முதல்வரும் அ.தி.மு.கவின் தலைவருமான எம்.ஜி. ராமச்சந்திரன் திடீரென உயிரிழந்தபோதும் கட்சி இதேபோன்ற நெருக்கடியை எதிர்கொண்டது.

மறைந்த முதல்வரின் மனைவி வி.என். ஜானகி தலைமையில் ஒரு பிரிவும் கொள்கைபரப்புச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் ஒரு பிரிவுமாக கட்சி உடைந்ததில் ஆட்சியே சில நாட்களில் கவிழ்ந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

எம்.ஜி.ஆர். மறைந்து ஒரு வாரத்திற்குள் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதாவின் பின்னால் பல சட்டமன்ற உறுப்பினர்கள் திரள, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த 1987 டிசம்பர் 28ஆம் தேதியன்று தமிழக சட்டப்பேரவை பெரும் ரகளையை சந்தித்தது. காவல்துறை உள்ளே புகுந்தது.

2017ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி வரலாறு மீண்டும் திரும்பியதைப் போல இருந்தது. எடப்பாடி கே. பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டப்பேரவையில் மீண்டும் ஒரு ரகளை அரங்கேறியது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி கே. பழனிச்சாமி அரசு வெற்றிபெற்று, தற்போதும் தொடர்ந்துவருகிறது.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது ஒருபோதும் ஊடங்களிடம் பேசாத தமிழக அமைச்சர்கள் தற்போது தனித்தனியாக, ஸ்டுடியோக்களுக்கே வந்து பேட்டியளிக்கிறார்கள். 'அம்மாவின் வழியில்' என்று சொல்லித்தான் ஒவ்வொரு அறிவிப்பையும் செய்கிறார்கள்.

ஆனால், ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது கடுமையாக எதிர்த்த 'உதய்' திட்டம் (மின்வாரியத்தின் கடன்களை அரசே ஏற்கச் செய்யும் திட்டம்), வறுமைக்கோட்டிற்குக் கீழிருப்பவர்களுக்கு மட்டுமான பொதுவிநியோகத் திட்டம், நீட் தேர்வு உள்ளிட்டவற்றை எந்த எதிர்ப்புமின்றி ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அரசும் தற்போதைய அரசும் நிறைவேற்றிவருகின்றன.

2016ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா , "எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காக இயங்கும்" என்று குறிப்பிட்டார்.

கட்சியின் எதிர்காலம் குறித்து பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்த ஜெயலலிதா, தனக்குப் பிறகு யார் என்பதை ஒருபோதும் பூடகமாகக்கூட வெளிப்படுத்தியதில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

இக்கட்டான சூழல்களில் ஓ. பன்னீர்செல்வத்தை இரண்டு முறை முதலமைச்சராக பதவியேற்கச் செய்தாலும், அவரை அ.தி.மு.கவின் வாரிசாகவோ, முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கலந்தாலோசனை செய்யும் அமைச்சராகவோ ஜெயலலிதா ஒருபோதும் கருதியதில்லை.

ஜெயலலிதா மரணமடைந்து சரியாக ஓராண்டு கழிந்திருக்கும் நிலையில், அவர் தலைமை தாங்கியிருந்த அ.தி.மு.கவும் அக்கட்சியின் ஆட்சியும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன. கட்சியின் பெயரும் சின்னமும் மீண்டும் கிடைத்துவிட்டன என்றாலும் டிடிவி தினகரன் தரப்பு கட்சியைக் கைப்பற்றாமல் விடுவதில்லையென கங்கனம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்பட்டால், எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அரசு மீண்டும் வெல்லுமா என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், ஓ. பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு. ஜெயலலிதா இருந்தவரை விசுவாசத்தின் மறுபெயராக, சசிகலா குடும்பத்தினருக்கு நெருக்கமானவராகக் காட்சியளித்த பன்னீர்செல்வம், அவர் மறைந்த பிறகு சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.

முதல்வர் பதவியிலிருந்து தன்னை இரு முறை ராஜிநாமா செய்யச்சொன்னபோது அமைதியாக விலகிக்கொண்ட ஓ. பன்னீர்செல்வம், சசிகலா அதே காரியத்தைச் செய்யச் சொன்னபோது கட்சியை உடைத்தார்.

ஜெயலலிதாவுக்கு மக்கள் செல்வாக்கு இருந்தது என்பதும் சசிகலாவுக்கு அது இல்லை என்பதுமே ஓ. பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளுக்குக் காரணம். இப்போது மத்திய அரசு எடப்பாடி கே. பழனிச்சாமியின் பின்னால் இருப்பதால் அமைதியாக துணை முதல்வராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம், காட்சிகள் மாறும்போது மீண்டும் போர் வாளை உயர்த்தக்கூடும்.

மற்றொரு புறம், 1995க்குப் பிறகு அ.தி.மு.க. அரசு மீது மிகப் பெரிய அதிருப்தி உருவாகியிருக்கிறது. நீட் விவகாரத்தில் ஏற்பட்ட தோல்வி, ஜி.எஸ்.டி வரி விவகாரம், மாநில அரசின் விவகாரங்களில் மத்திய அரசு பெருமளவில் தலையிடுவதான் தோற்றம் உருவாகியிருப்பது ஆகியவை சேர்ந்து, கட்சியை வீழ்ச்சிப் பாதையை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கின்றன.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள், சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதியிழப்பு குறித்து உள்ள வழக்குகள், ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் முடிவுகள் ஆகியவை கட்சிக்கும் ஆட்சிக்கும் உள்ள நெருக்கடியை மேலும் தீவிரமாக்கலாம்.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை ஒவ்வொரு நகரத்திலும் பிரம்மாண்டமாக கொண்டாடுவது மட்டும் இதற்கு வெறும் தீர்வாக அமையாது என்பதை ஆட்சியில் இருப்பவர்கள் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்