இட ஒதுக்கீடு: "சமுதாய மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி அரசு முடிவெடுக்கவேண்டும்"

படத்தின் காப்புரிமை DRKRISHNASAMY

தேவேந்திர குல வேளாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (OBC) சேர்க்க கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று டெல்லியில் பேரணி நடத்தினார்.

இந்நிலையில்,''இட ஒதுக்கீட்டை விட கெளரவம்தான் பெரிது என்ற நிலைப்பாடு சரியா?, சமூக சமத்துவதற்கு இட ஒதுக்கீடு இன்னும் அவசியமா?'' என பிபிசியின் சமூக வலைத்தளத்தில் நேற்று 'வாதம் விவாதம்' பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே...

''இட ஒதுக்கீட்டை விட சுய கெளரவம்தான் பெரிது என்ற நிலைப்பாடு மிகச்சரியே!'' என முத்துராமலிங்கம் என்பவர் பதிவிட்டுள்ளார்.

''ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீடே வேண்டாம் என்று சொல்ல வில்லை, எஸ்.சி. பட்டியலில் உள்ள இட ஒதுக்கீடு தேவையில்லை!'' என ரகுபதி கூறியுள்ளார்.

''தேவேந்திரகுல வேளாளர்கள் ஓபிசி-யில் சேர்வதை விரும்புகிறோம்'' என ராம் பதிவிட்டுள்ளார்.

''சாதியே தேவையில்லை'' என ராமதாஸ் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

``இந்த மண்ணில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்று தான் சங்க கால இலக்கியங்கள் கூறுகின்றன அப்படி இருக்கும் பொழுது பட்டியல் இனம் என்று அடையாளப் படுத்த வேண்டாம் அவர்களுக்கு உரிய சங்க காலப் பெயரையே அவர்கள் விரும்புகின்றனர். அதுவே அவர்களுடைய அடையாளம் என்று கருதுகின்றனர்,'' என சுந்தர் கூறுகிறார்.

சமூக அந்தஸ்து கோரும் இவர்களது கோரிக்கை நியாயமானது. அந்த சமுதாய மக்களிடையே ஓட்டெடுப்பு நடத்தி மத்திய அரசு இவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்'' என்கிறார் ராஜா.

''இட ஒதுக்கீட்டாலும் சலுகைகளாலும் ஒட்டு மொத்த சமுதாயமும் முன்னேறி விட முடியாது - அம்பேத்கர் (1956) ...இட ஒதுக்கீடு வந்து 60 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது ....என்ன முன்னேற்றம் கண்டது சமுதாயம்'' என வேந்தன் கூறுகிறார்.

அதே நேரம், எஸ்.சி. பிரிவில் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறுவது தீண்டாமையின் வடிவம் என்ற விமர்சனத்தையும் சிலர் முன் வைத்துள்ளனர்.

"பொருளாதாரத்தை ஒட்டி நாங்கள் மேன்மை அடைந்திட்டோம் ஆகையால் எங்களுக்கு இட ஒதுக்கீடுகள் வேண்டாம் என்று OBCக்கு மாறினால் நல்லது ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இருக்கும் பட்டியலில் நாங்க இருக்க மாட்டோம் என்ற ரீதியில் விலக்கம் கேட்டால் நிச்சயமாக அதுவும் ஒருவகையில் தீண்டாமையின் உச்சமே" என்பது வெற்றி ஷா என்பவர் கூறியுள்ள கருத்து.

"கௌரவத்திற்காக ஒதுக்கீட்டை விட்டொழிப்பதென்றால் இடஒதுக்கீடே வேண்டாம் என்று செல்லவேண்டும். அதை விடுத்து, எஸ்.சி. பிரிவில் வேண்டாம், பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் வேண்டுமென்பது சாதிய பாகுபாட்டின், தீண்டாமையின் மறுவடிவம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது," என்கிறார் ராதாகிருஷ்ணன் சு என்ற நேயர்.

பிற செய்திகள்:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜெருசலேம் அறிவிப்பு: முந்தைய அமெரிக்க அதிபர்கள் தயங்கியது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்