பேரறிவாளன் மனு: மத்திய அரசு விளக்கமாக பதில் தர உச்சநீதிமன்றம் ஆணை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக தண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளனை உடனடியாக விடுவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

வழக்கின் பின்னணி

மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரி தியாகராஜன் ஒரு பிராமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

பேரறிவாளனிடம் அவர் விசாரிக்கும்போது, தாணு பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டுக்கு தான் இரண்டு பேட்டரி வழங்கியதாக பேரறிவாளன் கூறியிருந்தார்.

ஆனால், அந்த பேட்டரியை வழங்கியபோது, அவற்றை என்ன காரணத்திற்காக, என்ன நோக்கத்திற்காக வழங்குகினேன் என்று தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் தெரிவித்திருந்தாக தியாகராஜன் கூறியிருக்கிறார்.

ஆனால், பேரறிவாளன் மீது விதிக்கப்பட்டிருக்கும் முக்கிய குற்றச்சாட்டு சதித்திட்டம் தீட்டியது என்பதாகும்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், அந்த வெடிகுண்டு தயாரிக்கும் சதித்திட்டத்தில் அவர் உடந்தையாக இருந்தார் என்பதே பேரறிவாளன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு.

பேட்டரிகள் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் என்பது பற்றிய காரணம் தெரியாமல் வழங்கப்பட்டுள்ளதால், இந்த சதித்திட்டத்தில் அவருக்கு பங்கிருக்க வாய்ப்பில்லை.

விசாரணை அதிகாரியாக இருந்தபோது, இதனை பற்றி விளக்கமாக நீதிமன்றத்திடம் நான் தெரிவிக்கவில்லை என்று திரு. தியாகராஜன் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார்.

பேரறிவாளன் முறையீடு

"தியாகராஜன் வழங்கிய பிரமாண பத்திரம் மிக முக்கியமான ஆவணம். இதனால் என்னுடைய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். எனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்" என்று பேரறிவாளன் மனு செய்திருந்தார்.

இந்த கோரிக்கை தொடர்பாக மத்தியப் புலனாய்வு துறை பதில் அளிக்க வேண்டும் என்று கடந்த விசாரணயின்போது உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இன்று செவ்வாய்கிழமை மத்திய புலனாய்வு துறைக்குப் பதிலாக மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

"இந்த சதித்திட்டத்தில் யார் யாருக்கு தொடர்பு என்பது பற்றி விசாரிக்க குழு ஒன்று அமைத்திருந்தோம். இந்த விசாரணை முடிவு எதுவும் இல்லாமல் நீண்டு கொண்டே சென்றதால், மேற்கொண்டு விசாரிக்கவில்லை. இதற்கு மேலும் விசாரிக்க வேண்டியதும் இல்லை" என்று இந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதனை விசாரித்தபோது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஈடுபட்டோருக்கு எந்தவித கருணையும் அளிக்கக்கூடாது என்று தெளிவாக சொல்லியிருக்கிறது.

மேலும், தமிழக அரசுக்கு இவர்களின் தண்டனை காலத்தை குறைப்பதற்கு அதிகாரம் உள்ளதா என்பதை முடிவு செய்ய 3 நிதிபதிகள் குழு விசாரிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்," என்றும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image caption ராஜிவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி மனு செய்த அற்புதத்தம்மாள்

"இந்த 3 நீதிபதிகள் குழு விசாரண நிலுவையில் இருக்கின்றபோது, இவரை விடுதலை செய்வதற்கு எந்தவொரு அனுமதியும் அளிக்கக்கூடாது. நீதிமன்றம் இந்த மனுவை நிராகரிக்க வேண்டும்" என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, "இது மேலெழுந்தவாரியான ஒரு வாதமாக இருக்கிறது. ஆனால், சிபிஐ அதிகாரி தியாகராஜனின் பிரமாணப் பத்திரத்திற்கு நீங்கள் சரியாக பதில் சொல்லவில்லை.

தியாகராஜன் அளித்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றதா இல்லையா? சதித் திட்டத்தில் பேரறிவாளனுக்கு பங்கு இருக்கிறதா இல்லையா? என்பதை நீங்கள் தெளிவாக சொல்லவில்லை.

எனவே, இது பற்றிய விளக்கத்தை பிரமாணப் பத்திரமாக இல்லாமல், பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். சிபிஐயும், மத்திய அரசும் இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

சிபிஐயின் அறிக்கை

சென்ற முறை நடைபெற்ற விசாரணையில், சிபிஐ மூடிய உறையில் வைத்து தங்களுடைய அறிக்கையை அளித்திருந்தது.

எனவே, அந்த அறிக்கையின் நகலை வழங்க வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பு வேண்டுகோள் வைத்தது.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/GETTY IMAGES

ஆனால், அறிக்கை நகலை வழங்க முடியாது. ஆனால், நீதிமன்றத்திலேயே அந்த அறிக்கையை பரிசீலனை செய்யலாம் என்று நீதிமன்றம் கூறிவிட்டது.

எனவே, நீதிமன்றத்திலேயே இந்த மூடிய உறையில் இருந்த அறிக்கையை வாசித்தனர்.

இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை தேவையில்லை. இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதான நிலைப்பாட்டை சிபிஐ அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஆனால், அதனை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. "சிபிஐ அதிகாரி தியாகராஜனின் பிரமாணப் பத்திரத்திற்கு உட்பட்டு உங்களுடைய பதில் மனு அமைய வேண்டும்.

இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையாக ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம்," என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதனால், பேரறிவாளனுக்கு தண்டனையை நிறுத்தி வைப்பதோ அல்லது ஜாமீன் அளிப்பதோ இப்போது தேவையில்லை என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :