ராகுல் காந்தியின் தலைமைத்துவத்தில் தமிழக காங்கிரஸின் பாதை எது?

ராகுல் காந்தியின் தலைமைத்துவத்தில் தமிழக காங்கிரஸின் பாதை எது? படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/Getty Images

(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இது பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராகுல்காந்தி முறைப்படி தேர்வு செய்யப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அதிகாரி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.

வரும் பதினாறாம் தேதி அவர் பதவியேற்பார் என்றும் தகவல். அதன்பின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூடி அவரது தேர்விற்கு ஒப்புதல் அளிக்கக்கூடும்.

கடந்த 2004ம் ஆண்டில் நேரடி அரசியலுக்கு வந்த ராகுல்காந்தி கட்சியின் பொதுச்செயலாளர், துணைத்தலைவர் ஆகிய படிநிலைகளை கடந்து இப்போது தலைவராகியிருக்கிறார்.

இக்காலகட்டத்தில் தொடர்ந்து மூன்றுமுறை நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் பொதுச்செயலாளராக, இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸிற்கான பொறுப்பாளராக இருந்த போது அவற்றிற்கு முறைப்படியான அமைப்புத் தேர்தல்களை நடத்தி நிர்வாகிகளை தேர்வுசெய்யும் நடைமுறைகளை அமுல்படுத்தினார்.

இத்தேர்தல்களை கண்காணிக்கவும் ஒழுங்குபடுத்தவும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜே.எம். லிங்டோ, தேர்தல் ஆணையர் கே.ஜே. ராவ் போன்றோர் இணைந்து நடத்தும் அறக்கட்டளையான Foundation for Advance Management of Election உதவுகிறது.

படத்தின் காப்புரிமை SAM PANTHAKY/AFP/Getty Images

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் வேட்பாளர்களை கட்சி நிர்வாகிகளே வாக்களித்து தேர்வு செய்யும் Primarily Electoral முறையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

மொத்தத்தில் காங்கிரஸின் பலவீனமாகிப்போன அமைப்பு முறைகளை சீர்திருத்துவதில் அவருக்கிருந்த அதிகாரத் தடைகள் இப்போது முழுமையாக நீங்கியிருக்கின்றன.

ராகுல் காந்தியைத் தொடர்ச்சியாக கவனிக்கும் ஒருவருக்கு, காங்கிரஸ் கட்சி பலவீனப்பட்டதற்கு அது தனது ஜனநாயக அமைப்பு முறைகளை இழந்ததே காரணம் என அவர் கருதுகிறார் என்பது புரியும். மேலும் சமூகத்தின் விளிம்பு நிலையினரான பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை அரசியலில் உறுதிப்படுத்துவதில் அவர் ஆர்வமாக இருக்கிறார்.

இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸ் தேர்தல்களில் இவர்களுக்கான ஒதுக்கீடும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இம்முறை மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடும் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் அவரின் தலைமைத்துவத்தில் தமிழக காங்கிரஸ் எந்தத் திசையில் பயணிக்கும் என்பது பற்றிய ஒரு சித்திரத்தை இங்கு பார்ப்போம்.

கடந்த 1967-ல் காமராசரின் தோல்விக்கு பிறகு மாநிலத்தில் காங்கிரஸ் நேரடி அதிகாரத்திற்கு வரவேயில்லை. மாறி மாறி அமைக்கப்பட்ட கூட்டணிகள் மத்திய ஆட்சிக்கு ஆதரவைப்பெறும் நோக்கில் உருவாக்கப்பட்டன. இடையில் தனித்து நிற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பின் கைவிடப்பட்டு கூட்டணிகள் அமைக்கப்பட்டன.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/Getty Images

இந்த வழக்கம் மெல்ல மெல்ல கட்சியினரின் அரசியல் செயலூக்கத்தை அழித்து வசதியான கூட்டணிக்கு ஏங்குபவர்களாக அவர்களை மாற்றியது.

இன்னொரு பக்கம் காமராசர் ஆட்சி என்பதை முதலில் உரக்கவும் பிறகு ஈனஸ்வரத்திலும் இன்று அவ்வப்போதும் காங்கிரஸ் தலைவர்கள் ஒலிப்பார்கள், ஒரு சடங்கில் உச்சரிக்கப்படும் மந்திரங்களைப்போல. ஆனால் அரசியல் என்பது மந்திரங்களால் நிகழும் மாய வித்தையல்லவே?

காமராசர் ஒரு மகத்தான தலைவர் என்பதிலும் அவரது ஆட்சி நவீன தமிழ் சமூக உருவாக்கத்திற்கு கிடைத்த நற்பேறு என்பதிலும் ஐயமேயில்லை.

ஆனால் அதைத் தாண்டி சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் தமிழச் சமூகத்தினை வடிவமைப்பதிலும் மேம்படுத்துவதிலும் காங்கிரஸ் முன்னோடிகள் ஆற்றிய பங்களிப்புகள் பற்றி காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரியாது.தெரிந்தாலும் பேசுவதில்லை.

இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியும் தமிழ் உரைநடையின் தனித்தன்மையை பாதுகாத்தவருமான தமிழத்தென்றல் திரு.வி., தமிழகத்தில் ஆரம்பக் கல்விக்கும் தொழிற்கல்விக்கும் வலுவான அடித்தளத்தை அமைத்த அவினாசிலிங்கம் செட்டியார், சென்னை மாகாணமாக இருந்தபோதே தமிழகத்திற்கு தொலைநோக்குடன் பொதுசுகாதாரக்கொள்ளையை உருவாக்கிய டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், காமராசருடன் இணைந்து தமிழ்க் கல்வி மே்பாட்டுக்கு மட்டுமின்றி வேளாண் வளர்ச்சிக்கும் தமிழ் மொழியை நவீன பயன்பாட்டு மொழியாக மாற்ற உறுதியோடு உழைத்த சி. சுப்பிரமனியம், இந்தியாவின் முதல் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்த எல்.இளையபெருமாள் என தமிழக காங்கிரஸ் மீட்டெுத்து பேச வேண்டியவர்களின் பட்டியல் பெரிது.

நரேந்திர மோதி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஒற்றை தேசிய திணிப்பிற்கு வலுவான எதிர்க் குரல்கள் தமிழகத்தில் எழத்துவங்கியுள்ள சூழலில் பன்மைத்துவ ஜனநாயகம்,மொழி நிகர்மை, சமூக நீதி, போன்ற விஷயங்களில் நவீன தமிழ்ச் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிப்பதில் தமிழக காங்கிரஸிற்கு அக்கறையிருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/Getty Images

அன்றாட அரசியல் பற்றிய சில சொற்களுக்கப்பால் இந்த புரிதல்களுடன் தமிழ்ச் சமூகத்தை அணுகவேண்டிய இன்றியமையாத தேவை இருக்கிறது. அருகிலிருக்கும் கேரள மற்றும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டிகள் இதை தெளிவாக புரிந்துகொண்டு செயல்படுகின்றன. ஆனால் இங்கு வழக்கமான அரசியல் பல்லவிகளுக்கப்பால் எதுவுமே பேசப்படுவதில்லை.

மேலும் தொன்னூறுகளில் நிகழ்ந்த உலகமயமாக்கலுக்கு பின்பு வந்த தலைமுறையினரே பெரும்பாலான இளம் வாக்காளர்கள். இவர்களுடன் உரையாடுவதிலும், இவர்களை புரிந்து கொள்வதிலும் கட்சிக்கு எந்த முனைப்பும் இருப்பதாக தெரியவில்லை.

ராகுல்காந்தி முன்வைக்கும் அரசியல் பற்றி மேலோட்டமாக பார்த்தாலே அவர் பன்மைத்துவ ஜனநாயகத்திற்கும் சமூக நீதியை உள்ளடக்கிய வளர்ச்சி அரசியலுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார் என்பது புலப்படும். இந்த நோக்கில் தனக்கான செல்திசையை வகுப்பதே தமிழக காங்கிரஸ் தனக்கும் தமிழகத்திற்கும் ஆற்றும் பேருதவியாக இருக்கும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :