குஜராத் வெற்றி: மோதிக்கு சொந்தமா, பாஜகவுக்கு சொந்தமா?

குஜராத் வெற்றி படத்தின் காப்புரிமை Getty Images

ஒரு கட்டத்தில் குஜராத்தில் நெருக்கமான தேர்தலைப் போல தோன்றினாலும், இறுதியில் பா.ஜ.கவிற்கு இது மற்றொரு வசதியான வெற்றியாக மாறியது. காங்கிரஸ் கடும் போட்டியைக் கொடுத்து, தனது வாக்கு சதவிகிதத்தை அதிகரித்துள்ளது. ஆனால், பிரதமர் மோதி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் சொந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் பா.ஜ.கவை வீழ்த்த முடியவில்லை.

இமாச்சல பிரதேச வெற்றியின் மூலம் ''காங்கிரஸ் இல்லா தேசம்'' என்ற தனது குறிக்கோளுக்குப் பா.ஜ.க மற்றொரு படி நெருக்கமாக வந்துள்ளது. இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது என்பது உண்மை. ஆனால், பா.ஜ.க, கட்சியை விட மோதிக்கே இதில் அதிக வெற்றி.

பா.ஜ.கவிற்கு காங்கிரஸ் அதிக சவால்களை வைத்தபோதிலும், மோதி தனியாக சமாளித்து மற்றொரு வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளார். மணி சங்கர் ஐயர் போன்ற தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள், காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்ய மோதிக்கு உதவியது என்பதை மறக்கக் கூடாது.

இமாச்சலில் கடந்த 5 வருடங்களாக காங்கிரஸ் ஆட்சி இருந்தநிலையில், அங்கு பா.ஜ.கவின் வெற்றி இயல்பானதாக இருந்தது. ஆனால், குஜராத்தில் பா.ஜ.கவின் வெற்றி பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

22 வருடங்களாக அங்கு ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவிற்கு எதிர்ப்பு, ஹர்திக் பட்டேல் தலைமையிலான பட்டேல் சமூகத்தின் போராட்டம், ஜிக்னேஷ் மேவானி தலைமையிலான தலித் மக்களின் போராட்டம், பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் அதிருப்தி என பா.ஜ.கவிற்கு பல சிரமங்கள் இருந்தன.

படத்தின் காப்புரிமை Getty Images

மோதி குஜராத்தில் இல்லாதது பா.ஜ.கவின் பிரச்சனைகளை அதிகரிக்க வைத்ததாகத் தெரிகிறது. இந்தச் சிரமங்களுக்கு மத்தியிலும் குஜராத்தில் பா.ஜ.க வெற்றியைப் பெற்றுள்ளது.

கடைசி இரண்டு வார பிரசாரத்தின் போது, பிரதமர் மோதி நடத்திய தீவிரமான பிரசாரமே பா.ஜ.கவிற்கு உதவியதாகத் தெரிகிறது.

வளரும் சமூகங்களுக்கான ஆய்வு மையம்(சி.எஸ்.டி.எஸ்) நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், வாக்காளர்களைத் திரட்டுவதில் மோதியின் பிரசாரம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது கண்டறியப்பட்டது.

காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என முன்பே முடிவு செய்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கடைசி நேரத்தில் முடிவு செய்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

மோதி பிரசாரத்தை துவங்கிய பிறகு, பா.ஜ.கவிற்கு ஆதரவாக மக்களின் மனநிலை மாறியது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என 35% குஜராத் மக்கள் கடைசி இரண்டு நாட்களில் முடிவு செய்தார்கள் என்ற தகவல் முக்கியமானது.

முதல் இரண்டு வாரத்தில் தனது தீவிர பிரசாரத்தால் காங்கிரஸ் கட்சி பா.ஜ.கவை பின்னுக்கு தள்ளியது. ஆனால், மணி சங்கர் ஐயரின் கருத்துக்கு பிறகு மோதி நடத்திய தீவிர பிரசாரத்தால் காங்கிரஸ் தனது வேகத்தை இழந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹர்திக் பட்டேல்

மணி சங்கர் ஐயரின் கருத்துக்கு பிறகு, குஜராத் பெருமை உணர்வைத் தூண்டும் விதமான கருத்துக்களை பயன்படுத்தி பா.ஜ.க பிரசாரம் நடத்தியது காங்கிரஸை பின்னுக்குத் தள்ளியது.

ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கூர் என பல சமூக தலைவர்களை ஒன்றிணைத்து காங்கிரஸ் அமைத்த கூட்டணி, அந்தந்த சமூகத்தை சேர்ந்த ஓட்டுகளைப் பெற உதவியது. இதனால் முந்தைய தேர்தலை விட அதிக வாக்கு சதவிகிதத்தை காங்கிரஸ் பெற்றது. ஆனால், வெற்றி பெறுவதற்கு காங்கிரஸுக்கு இது போதவில்லை.

படிதார்களின் ஓட்டுகளை தன் பக்கம் திருப்ப முடியும் என காங்கிரஸ் நம்பியது. ஆனால், 40 சதவிகிதத்துக்கு குறைவான படிதார்களே காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள் என்றும், பா.ஜ.க 60 சதவிகித படிதார் ஓட்டுகளைப் பெற்றது என்றும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் காட்டியது.

ஜிக்னேஷ் மேவானி உடனான கூட்டணியும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் உதவவில்லை. 47சதவிகித தலித்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கும், 45சதவிகித தலித்துக்கள் பா.ஜ.கவிற்கும் வாக்களித்திருந்தனர்.

அதேபோல பிற்படுத்தப்பட்டவர்களின் ஓட்டுகளும் காங்கிரஸ், பா.ஜ.க இடையே பிரிந்திருந்தது. படிதார்களிடம் இழந்த ஓட்டுகளை, பழங்குடியினரிடம் பெற்று பா.ஜ.க ஈடு செய்தது. பழங்குடியினரின் 52 சதவிகித ஓட்டுகளைப் பா.ஜ.கவும், 40 சதவிகித ஓட்டுக்களை காங்கிரஸும் பெற்றது. முந்தைய தேர்தல்களில் பழங்குடியினரின் ஓட்டுகளை காங்கிரஸ் அதிகளவு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜிக்னேஷ் மேவானி

குஜராத்தில் பா.ஜ.கவின் ஆட்சியில் அனைத்தும் சரியாக இருக்கிறது என்பதை பா.ஜ.கவின் வெற்றி காட்டவில்லை. ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அரசாங்கங்களின் சாதனை திருப்திகரமாக இருந்தாலும், அதிருப்திக்கான அறிகுறிகள் வெளிப்படையாக உள்ளன.

பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்கள் குஜராத் மற்றும் இமாச்சலில் அதிருப்தியில் உள்ளனர். அதிருப்தி மற்றும் ஆழ்ந்த துயரத்தில் உள்ள விவசாயிகள், தங்கள் பிரச்சனையை தீர்க்க அரசு உதவவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர். 2014 நாடாளுமன்ற தேர்தலில் இருந்தது போல, இளைஞர்களுக்கு மோதியின் மீது இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை. பிரதமர் மோதி மீது அதிருப்தி இருப்பதற்கான அறிகுறிகள் இவை.

இந்த அதிருப்திகளைப் பா.ஜ.கவுக்கு எதிரான கோபமாக மாற்ற காங்கிரஸ் தவறிவிட்டது. குஜராத்தில் பா.ஜ.க ஆட்சியை அகற்றுவதற்கு இந்த அதிருப்தி மட்டும் போதாது. பா.ஜ.கவின் ஆட்சியை வீழ்த்துவதற்குக் கோபம் தேவை. ஆனால், கோபமாக மாறும் அளவிற்கு அதிருப்தியின் தீவிரம் வெகு குறைவாக இருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஹர்திக் பட்டேல் நடத்திய கூட்டத்தினால், அரசுக்கு எதிரான அதிருப்தி உணர்வு அதிகரித்தபோதிலும், குஜராத் பெருமை உணர்வைத் தூண்டும் விதமாகப் பேசி மோதி நடத்திய பிரசாரம் அதிருப்திகளை ஈடு செய்தது.

குஜராத்தில் பா.ஜ.க 49 சதவிகித ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 41 சதவிகித ஓட்டுகளைப் பெற்று தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றிக்கு மத்தியிலும், பா.ஜ.க கவலைப்படுவதற்கான காரணங்கள் உள்ளன.

வேலையில்லா திண்டாட்டத்தினால் இளம் வாக்காளர்கள் பா.ஜ.கவிடம் இருந்து விலகிச் செல்வது அதிகரித்துள்ளது. பாஜக ஆதரவு தளத்தின் முதுகெலும்பாக உள்ள வணிகர்கள் மற்றும் வர்த்தக சமூகங்களிடையே அதிருப்திகள் தெரிகின்றன. முக்கிய ஆதரவாளர்கள் மத்தியில் சில தரப்பினரை இழப்பது இக்கட்சிக்குக் கவலை தரும் விஷயம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்