குஜராத் தேர்தல் முடிவுகள்: 'நோட்டா'-வுக்கு வாக்களித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

படத்தின் காப்புரிமை Getty Images

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டபேரவை வாக்குப்பதிவு முடிவுகள் நேற்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்ட நிலையில், குஜராத் மாநிலத்தில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசியாக இருக்கும் நோட்டா என்ற சின்னத்தில் வாக்காளர்கள் வாக்குகளை செலுத்தலாம்.

நடந்து முடிந்த குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டபேரவை வாக்கு எண்ணிக்கையில் குஜராத் மாநிலத்தில் மட்டும் சுமார் 5 லட்சத்து 51 ஆயிரத்து 615 பேர் வாக்களித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் நோட்டாவிற்கு விழுந்த வாக்குகளின் சதவீதம் மட்டும் 1.8%. இதன்மூலம் அதிக வாக்குகளை பெற்ற மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை நோட்டா பெற்றுள்ளது.

இமாச்சல பிரதேச தேர்தலிலும் சுமார் 34 ஆயிரத்து 232 வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

நூலிழையில் வெற்றியை தவறவிட்ட காங்கிரஸ்

குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில், 16 தொகுதிகளில் 3000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது.

இந்த 16 தொகுதிளிலும் பாஜகவை வீழ்த்த காங்கிஸுக்கு தேவையான வாக்குகளை காட்டிலும் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் அதிகம்.

அதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தொகுதி வாக்குகள் வித்தியாசம் நோட்டா
போதாட் 906 1334
தபோய் 2839 3046
தோல்கா 327 2347
ஃபதேபுரா 2711 4573
கரியாதர் 1876 1557
கோத்ரா 236 3050
ஹிமத் நகர் 1712 3334
கம்பத் 2318 2731
மட்டர் 2406 4090
போர்பந்தர் 1855 3433
பிராந்திஜ் 2551 2907
ராஜ்கோட் (கிராமப்புறம்) 2179 2559
அம்ரெத் 1883 3710
வாக்ரா 2370 2807
விஜாபுர் 1164 1280
விஸ்நகர் 2869 2992

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :