ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு: ஓராண்டிற்குமுன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன ஆனது?

கடந்த ஆண்டு இதே நாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்த 24-வது நாளில் அதிமுக சார்பில் கூட்டப்பட்ட அவசர பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன் ஃபிளாஷ்பேக் இது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்த நிலையில் மாநில முதல்வராக பன்னிர்செல்வம் பதவியேற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் சென்னையில் உள்ள உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அவசர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Image caption சாலைகள் முழுவதும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பதாகைகள்

பொதுக்குழு கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த முதல்வருக்கு தொண்டர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்கள் சமூக ஊடகங்களில் அதிமுக கேலிக்குள்ளாக பிரதான காரணமாக இருந்தது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினம் என்று அறிவிக்கவும், நாடாளுமன்றத்தில் முதல்வரின் வெண்கலச் சிலையை நிறுவ மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மற்றொரு தீர்மானத்தில், மானுட சேவைக்கான பிலிப்பின்ஸ் நாட்டின் ரமோன் மகசேசே விருது மற்றும் உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறைந்த நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட மாட்டாது என்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமல் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இவ்வாறான ஒரு தீர்மானத்தை எப்படி நிறைவேற்றினார்கள் என்று கேள்வி எழுப்பி இணையவாசிகள் சமூக ஊடகங்களில் அதிமுகவை கிண்டல் செய்தனர்.

இந்த சம்பவம் நடைபெற்று ஓராண்டு ஆகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்