மும்பை தீ விபத்தில் இருந்து தப்பித்தது எப்படி? பிபிசி செய்தியாளரின் அனுபவம்

மும்பை கமலா மில் தீ விபத்து. படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption மும்பை கமலா மில் தீ விபத்து.

டிசம்பர் 28-ம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு மும்பையில் உள்ள ஒரு விடுதி தீப்பிடித்து எரிந்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த விபத்து நடந்தபோது அந்த விடுதியில் தங்கியிருந்த பிபிசி குஜராத்தி சேவையின் ஆசிரியர் அங்கூர் ஜெயின் தமது சகோதரி மற்றும் நண்பர்களுடன் பாதுகாப்பாக வெளியேறினார்.

தான் பார்த்தது என்ன, தப்பித்தது எப்படி என்ற தமது அனுபவத்தை அவர் விளக்குகிறார்.

"மும்பையில் உள்ள உணவு விடுதி ஒன்றின் வழக்கமான மாலை நேரம்தான் அது. என் வாழ்வின் மிகப் பயங்கரமான மாலை நேரமாக அது மாறும் என்பது எனக்குத் தெரியாது. லோயர் பரேலில் உள்ள கமலா மில் விடுதி மற்றும் வணிக வளாகத்தில் இருந்த எனக்கும், என்னைப்போன்ற 100 பேருக்கும் நேர்ந்தது இதுதான். சகோதரியோடும் நண்பர்களோடும் இரவு உணவுக்குக் கிளம்பினேன். நாங்கள் நான்கு பேர் ஒன் அபோவ் ரெஸ்டாரண்டை அடைந்தோம். அந்த நேரத்தில் அந்த விடுதியில் மிகுந்த கூட்டம். எங்களுக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை," என்கிறார் அவர்.

இசை நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் காத்திருந்தோம். "அங்கே தீ... எல்லோரும் வெளியே ஓடுங்கள் என்ற கூக்குரல் கேட்டபோது இரவு 12.30 இருக்கும். இந்தக் குரலைக் கேட்டு நாங்கள் எச்சரிக்கை அடைந்தாலும், விடுதியின் ஒரு கோடியில் சிறு தீ எரிவதையே நாங்கள் பார்த்தோம். எளிதாக கட்டுப்படுத்தக்கூடியதாகவே அது தெரிந்தது. ஆனால், என் எண்ணம் தவறு."

"தீ மளமளவென பரவியதும், ஒவ்வோர் இடமாக அது சூழ்ந்துகொண்டதும் விடுதியில் இருந்தவர்களுக்கு ஒரு சில நொடிகளில் உரைத்தது. மேல் மாடியில் இருந்த அந்த உணவகத்தின் 'ஃபால்ஸ் சீலிங்' எனப்படும் அலங்கார விதானத்தில் தீப்பிடித்தபோது தீயின் வேகம் அணைக்கக்கூடிய எல்லையைத் தாண்டிவிட்டது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மும்பையில் கமலா மில்ஸ் கட்டட வளாகத்தில் தீ விபத்து

தீ விபத்து அவசரகால வெளியேறும் வழியின் மூலம் வெளியேறும்படி ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால், அங்கே நெரிசலாக இருந்தது. எங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றும் தீயில் பொசுங்கிக்கொண்டிருந்தது.

ஒருவழியாக நாங்கள் படிக்கட்டினை அடைந்தோம். அப்போதுதான் எங்கள் குழுவில் ஒரு பெண்ணைக் காணவில்லை என்பது புரிந்தது. நாங்கள் பீதியடைந்தோம். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் நாங்கள் மீண்டும் மீண்டும் அவரது பெயரைச் சொல்லிக் கூப்பிட்டோம்.

கட்டடத்தின் இன்னொரு பக்கத்திலும் ஆட்கள் வெளியேறிச் செல்வதாக யாரோ கூறினார்கள். எனவே, அந்த வழியில் அந்த நண்பர் தப்பியிருக்கக்கூடும் என்று நம்பி நாங்கள் வெளியேறினோம். அதிருஷ்டவசமாக எங்கள் நம்பிக்கை பொய்க்கவில்லை," என்கிறார் அங்கூர் ஜெயின்.

மேலும் அவர் கூறுகையில், "மூன்றாவது மாடியில் இருந்து நாங்கள் கீழே இறங்கிச் சென்றோம். கீழே இறங்கும்போது வெடிக்கும் சத்தமும், ஆள்கள் கத்தும் சத்தமும் கேட்டது. வெளியேறும் வழியை நோக்கி மெதுவாக நகரும்படி உறவினர் ஒருவர் போனில் கூறினார். எப்படியோ நாங்கள் கட்டடத்தை விட்டு வெளியேறிவிட்டோம்.

தீ தொடங்கியபோதே நாங்கள் உணவகத்தை விட்டு வெளியேறினோம். வெளியேறும் வழிக்கு அருகில் இருந்ததால், நாங்கள் கட்டடத்தை விட்டு சரியான நேரத்தில் வெளியேறினோம்.

நாங்கள் வெளியே வந்தபோது, தங்கள் நண்பர்களும் குடும்பத்தாரும் இன்னும் மாடியில் இருப்பதாக பலர் கூச்சல் எழுப்பிக்கொண்டிருந்தனர். ஆனால் இவ்வளவு பெரிய துயரம் மாடியில் அரங்கேறிக்கொண்டிருப்பது யாருக்கும் அப்போது தெரியவில்லை.

மொட்டை மாடி தீயின் நடன அரங்காக மாறியிருந்தது. பாதுகாவலர்கள் எல்லோரையும் கட்டடத்தை விட்டு வெளியேறும்படி கூச்சலிட்டனர். இந்த பீதிகளுக்கு இடையில் எங்கள் குழுவின் நான்காவது உறுப்பினரும் கீழே இருப்பதைக் கண்டுபிடித்தோம்.

விரைவில், தீயணைப்பு வாகனங்கள் அந்த வளாகத்துக்கு வரத்தொடங்கின.

மூவர் காயமடைந்திருப்பதாக தீயணைப்புப் படையினர் கூறியபோது மணி சுமார் 12.40".

"நாங்கள் வீடு திரும்பினோம். ஆனால், தீ அணைக்கப்பட்டுவிட்டதா என்பதை தொலைக் காட்சி செய்தியில் பார்த்துக்கொண்டிருந்தோம். அது பேரிடியாக, உளைச்சலாக இருந்தது. அயர்ச்சியில் நாங்கள் உறங்கிவிட்டோம்.

அதிகாலையில் எங்கள் வாழ்வின் மிகப்பெரிய அதிர்ச்சி தரும் செய்தி எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தது. அந்த விபத்தில் 15 பேர் மாண்டு போயினர்.

அணைக்க முடியாத தீ போலவோ, இவ்வளவு பெரிய துயரமாக மாறக்கூடியதாகவோ முதலில் அது தோன்றவில்லை. ஆனால், இது இவ்வளவு பெரிய இழப்பாக மாறியதற்கு, அங்கு நிரம்பி இருந்த எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களே காரணம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மொட்டை மாடி உணவு விடுதியில் தீயின் தாண்டவம்.

ஏனெனில், இதுபோன்ற பேரிடர் நடக்கும் என்பதை விடுதி உரிமையாளரோ, அதிகாரிகளோ நினைத்துப் பார்க்கவில்லை. வாடிக்கையாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பைப் பற்றியும் அவர்கள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை".

"பெரும்பாலான மரணங்கள் பெண்கள் கழிவறைப் பகுதியில் நடந்திருப்பதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. என் நினைவுக்கு எட்டியவரை, அந்த இடம் தீவிபத்தின் போது வெளியேறுவதற்கான அவசரகால வழி அருகேதான் இருந்தது.

தீ பரவுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் எங்கள் குழுவில் இருந்த ஒருவர் அங்கு சென்று திரும்பினார். அவர் விரைவாக திரும்பி வராமல் போயிருந்தால் என்னவாயிருக்கும் என்று நினைத்தாலே நடுங்குகிறது.

அவசரகால வெளியேறும் வழியில் அட்டைப் பெட்டிகள் இருபுறமும் அடுக்கிவைக்கப்பட்டிருந்ததால், முதலில் தீப்பிடித்ததே அந்த வழியில்தான்.

இவ்வளவு பெரிய நிறுவனம் எப்படி இப்படி அரைகுறையான தீ பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது என்று அறிந்தபோது அது அதிர்ச்சியாக இருந்தது.

சாவுப் பொறியாக போல அமைந்த ஒரு விடுதிக்கு எப்படி அதிகாரிகள் அனுமதி அளித்தனர்?," என்று கேட்கிறார் ஜெயின்.

(தீவிபத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும், அது தொடர்பான உரிமங்களும் இருந்ததாக அந்த விடுதி தனது பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளது. போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்).

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்