பாழடைந்த வீட்டில் பரிதவிக்கும் நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி

கொல்லங்குடி கருப்பாயி
Image caption கருப்பாயி

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறப் பாடல்களை எழுதி பாடிய கலைமாமணி விருதுபெற்ற பாடகி கொல்லங்குடி கருப்பாயி (80) இடிந்துவிழும் நிலையில் உள்ள வீட்டில் வசிப்பதாகவும், அன்றாட வாழ்க்கையை சிரமத்துடன் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொல்லங்குடி கிராமத்தில் வசித்துவரும் பாடகி கருப்பாயிக்கு நலிந்த கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் அளிக்கும் மாதாந்திர உதவித்தொகையான ரூ.4,000 கிடைப்பதாகவும், மருத்துவச் செலவு மற்றும் வசிக்கும் வீட்டை சரிப்படுத்த நிதி தேவைப்படுவதாகவும் கூறினார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த 'வீதி' விருதுவிழா என்ற நிகழ்வை பாடல்கள் பாடி தொடங்கிவைத்த கருப்பாயி, பிபிசி தமிழிடம் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

வறுமை நிலையில்

''நாட்டுப்புறப்பாடல்கள் பாடுவது, திரைப்படத்தில் பாடல்கள் பாடுவது என ஒரு காலத்தில் புகழ்பெற்ற கலைஞராக இருந்தேன். இன்றும் பலர் என்னை வந்து சந்திக்கிறார்கள். ஆனால் என் ஏழ்மை நிலையைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். நான் இதுவரை யாரிடமும் உதவி கேட்கக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் நான் வாழும் வீடு இடிந்துவிழும் நிலையில் இருப்பதால், தினமும் பயத்துடன் வாழ்கிறேன், யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை,'' என கருப்பாயி தெரிவித்தார்.

கணவர் செல்லையா இறந்து பத்து ஆண்டுகள் கழிந்துவிட்டதாகவும், தனக்கு குழந்தைகள் யாரும் இல்லை என்பதாலும், உறவுப்பெண் ஒருவரின் கவனிப்பில் எப்போதாவது வெளியூர்களுக்குப் பயணம் செய்வதாகவும் கருப்பாயி கூறினார்.

படத்தின் காப்புரிமை NITHIN
Image caption கருப்பாயி வீடு . புகைப்படம் - நிதின்

சினிமா வாய்ப்புகள் குறைந்தது

1985ல் நடிகர் பாண்டியராஜனின் ஆண் பாவம் படத்தில் பாடல் பாடி மிகவும் பிரபலமாக இருந்தார். ஆனால் சினிமாவில் பாடுவதற்கும், நடிப்பதற்கும் வாய்ப்புகள் குறைந்ததாலும், திருவிழாக்களில் நாட்டுப்புறப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சிகள் குறைந்துவிட்டதாலும், தனக்கு வருமானம் எதுவும் இல்லாமல் போனது என்று தெரிவித்தார்.

நாட்டுப்புறப் பாடல்களை பாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றி பேசிய கருப்பாயி, ''தற்போதைய காலத்தில் பாடல் பாடுபவர் ஒருவராகவும், பாடலை எழுதியவர் ஒருவராகவும், இசை அமைப்பவர் ஒருவராகவும் இருக்கிறார்கள். நாட்டுப்புற பாடல்கள் பெரும்பாலும் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்களாக இருக்கும். இந்த பாடல்களை பாடகரே இசை அமைத்து, வார்த்தைகளைக் கோர்த்து ரசித்துப் பாடுவார்கள். தற்போது நாட்டுப்புறப் பாடல்களை காலத்திற்கு ஏற்றவாறு பாடுபவர்கள் குறைவாகவே உள்ளனர்,'' என்று கருப்பாயி கவலைப்படுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்