குட்கா விவகாரம்: அமைச்சர், டிஜிபியை நீக்க தி.மு.க. வலியுறுத்தல்

குட்கா

குட்கா விவகாரத்தில் தமிழ்நாடு சுகாதார அமைச்சருக்கும் அப்போதைய காவல்துறை ஆணையருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு கடிதம் கிடைத்திருப்பதை வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கும் நிலையில், அவர்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

குட்கா விவகாரத்தில் யார் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிவதற்காக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென்று தி.மு.கவின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் இன்று வருமான வரித் துறையின் சார்பில் பிரமாணப் பத்திரமொன்று தாக்கல்செய்யப்பட்டது.

வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவின் முதன்மை இயக்குனர் சுசி பாபு வர்கீஸால் தாக்கல் செய்யப்பட்ட அந்த பிரமாணப் பத்திரத்தில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தில் சோதனையிட்டபோது, குட்கா விவகாரத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர், சில மூத்த காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள் காவல்துறை தலைவர் அசோக் குமார் முதல்வருக்கு எழுதிய கடிதம் கிடைத்ததாக" கூறப்பட்டுள்ளது.

வேதா நிலையம் இல்லத்தில் கடந்த நவம்பர் 17ஆம் தேதியன்று இரவில் சோதனை நடத்தியபோது ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அறையில் சோனையிடப்பட்டதாகவும் அங்கு முன்னாள் டிஜிபி 2016 செப்டம்பர் 2ஆம் தேதி முதல்வருக்கு எழுதிய கடிதம் கிடைத்ததாகவும் அத்துடன் வருமான வரித்துறையின் முதன்மை இயக்குனர் 2016 ஆகஸ்ட் மாதம் எழுதிய ரகசியக் கடிதமும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்ததாக வருமான வரித்துறை தன் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இன்று சட்டப்பேரவையில் தி.மு.க பேச முயன்றபோது, நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம் என்பதால் அது குறித்து பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

சட்டமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், "வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் குட்கா விவகாரத்தில் நடந்த உண்மைகளை தாக்கல் செய்துள்ள நிலையில், அன்றைக்கு காவல்துறை ஆணையராக இருந்த ராஜேந்திரன் இப்போது பதவி உயர்வு பெற்று, காவல்துறைத் தலைவர் பொறுப்பில் இருக்கிறார். எனவே, அவரை உடனடியாக அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அதேபோல, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முதல்வர் அவரை நீக்க வேண்டும்" என்று கூறினார்.

குட்கா விவகாரம் குறித்து வருமான வரித்துறை மாநில அரசுக்கு எந்த கடிதமும் எழுதவில்லையென மாநில அரசின் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு முரணாக வருமான வரித்துறை இந்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல்செய்துள்ளது.

இந்த வழக்கு ஜனவரி 17ஆம் தேதிக்கு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்