சென்னையில் கடும் பனிமூட்டம்: ரயில், விமானங்கள் தாமதம்

சென்னை மாநகரம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் சனிக்கிழமை கடும் பனி மூட்டம் ஏற்பட்டது. போகிப்புகையால்தான் இந்த பனி மூட்டம் தீவிரமடைந்தது என்று கூறப்படும் நிலையில் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள், ரயில்கள் தாமதமாக புறப்பட்டன.

சென்னை விமான நிலையத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்திலும் இந்த தாமதங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

சென்னை போகிப் புகையால் ஏற்பட்டதாகச் சொல்லப்படும் பனி மூட்டத்தால் ஓடுபாதையில் போதிய வெளிச்சமின்மை ஏற்பட்டு விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது தாமதமடைந்தது. விமான நிலையத்தின் அறிவிப்புப் பலகையில் எல்லா விமானங்களும் தாமதமாகப் புறப்படுவதாகக் குறிக்கப்பட்டிருப்பதை படமெடுத்து டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் குல்ஷன் காத்ரி என்பவர்.

பனி மூட்டம் காரணமாக விமானங்கள் புறப்படத் தாமதம் ஆனதாலும், தரை இறங்காமல் விமானங்கள் வானில் வட்டமடித்துக்கொண்டு இருந்தததாலும் விமான நிலையத்தில் விமானம் ஏறக் காத்திருந்த பயணிகள் கூட்டம் மட்டுமல்லாது, பயணிகளை வழியனுப்பவும், வரவேற்கவும் வந்தவர்களின் கூட்டமும் மிகுதியாகக் காணப்பட்டது.

குறுகிய கால இடைவெளிக்குள் பல விமானங்கள் தரை இறங்க அனுமதி வழங்கப்பட்டதால், நிறுத்த இடம் இல்லாமல் விமானங்கள் ஓடு தளத்திலேயே சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக பிபிசி தமிழின் செய்தியாளர் அறவாழி இளம்பரிதி சென்னையிலிருந்து தெரிவிக்கிறார்.

பல விமானங்கள் ஓடு தலத்தில் இருந்ததால் பயணிகளை விமானங்களில் பயணிகள் மற்றும் உடைமைகளை ஏற்றும் மற்றும் இறக்கும் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

போகிப் புகையால் ஏற்பட்ட பனி மூட்டத்தால் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படவேண்டிய ரயில்கள் தாமதாயின.

சென்னை வீதியொன்றில் பனி மூட்டத்தால் சாலையையே சரிவர பார்க்க முடியாத நிலை.

படத்தின் காப்புரிமை M.P.Giri
Image caption திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலை பனி மூட்டத்தால் மூடிக்கிடந்த காட்சி. செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தமது முகநூல் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்