நாளிதழ்களில் இன்று: "ராணுவ அதிகாரி அவருடைய பணியை பார்த்தால் மட்டும் போதும்" - கல்வி அமைச்சர்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

தினத்தந்தி

கர்நாடக முதல்வர் சித்தராமையவுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரியில் தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ள செய்தி தினத்தந்தி நாளிதழில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. "அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள காவிரி நடுவர் மன்றத்தின் 5.2.2007 தேதியிடப்பட்ட இறுதித் தீர்ப்பின்படி, பிலிகுண்டுலுவில் இருந்து 192 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி) தண்ணீரை தமிழகம் பெறவேண்டும் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். ஆனால் 9.1.2018 தேதி நிலவரப்படி 179.871 டி.எம்.சி. தண்ணீர் தரப்பட வேண்டிய நிலையில், 111.647 டி.எம்.சி. நீர் மட்டுமே பிலிகுண்டுலுவில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது. இதனால் 68.224 டி.எம்.சி. பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. 2017-18-ம் ஆண்டு பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த அக்டோபர் 2-ந் தேதியன்றுதான் தண்ணீர் திறக்க முடிந்தது. பொதுவாக ஜூன் 12-ந் தேதியன்று தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் நீர் வரத்து குறைவு காரணமாகவும், அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததாலும் இந்த நிலை ஏற்பட்டது.ஆரம்பத்தில் மிக உதவிகரமாக இருந்த வடகிழக்கு பருவ மழையினால் சம்பா பயிர் செய்வது உடனே தொடங்கினாலும் கூட, கடந்த அக்டோபர் இறுதிக் கட்டத்தில் மழை அதிகமாகி அனைத்தும் அழிந்துபோய்விட்டன. பெருமழையின் வேகத்தை தாங்காத அந்த இளம் பயிர்கள் அழிந்துவிட்டன. எனவே காவிரி டெல்டா விவசாயிகள் மீண்டும் அந்த பயிரை பயிரிட வேண்டியதுள்ளது. அந்த பயிர் வளரக் கூடிய முக்கிய காலகட்டத்தில் தண்ணீர் தேவை உள்ளது. மேலும் ஜனவரி மாதத்தையும் தாண்டி பயிர் செய்ய வேண்டும்." என்று அந்தக் கடிதத்தில் உள்ளதாக தினத்தந்தி செய்தி விவரிக்கிறது.

தினமணி

நீதிபதிகளுடன் பேச ஏழு பேர் குழுவை பார் கவுன்சில் அமைத்தது தொடர்பான செய்தி நாளிதழின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில்,"பார் கவுன்சில் எனப்படும் இந்திய வழக்குரைஞர் சங்கம் தில்லியில் சனிக்கிழமை அவசரமாகக் கூடியது. சங்கத்தின் தலைவர் மனன் குமார் மிஸ்ரா தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் மூத்த வழக்குரைஞர்கள் பங்கேற்றனர். அப்போது, நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கருத்து வேறுபாட்டைத் தீர்த்து வைத்து சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் இப்பிரச்னையில் சம்பந்தப்படாத மற்ற நீதிபதிகள் அனைவரையும் சந்திப்பதற்கு 7 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (தமிழ்)

தி இந்து தமிழில் வழக்கறிஞர்கள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கே சந்துரு ஒரு நடுப்பக்க கட்டுரை எழுதி உள்ளார். அந்தக் கட்டுரை வழக்கறிஞர்கள் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று விவரிக்கிறது. அந்தக் கட்டுரையில், "நேரடி அரசியலில் நுழைந்து, நாடாளுமன்றத்தின் உறுப்பினராகச் சேவை புரிய வேண்டும் என்று எண்ணக்கூடிய வக்கீல்கள், மீண்டும் தாங்கள் இழந்த சொர்க்கத்தை மீட்டிட வேண்டும் என்று பணம் எண்ணும் இயந்திரங்களாக நீதிமன்ற வளாகத்தில் உலாவக் கூடாது. நாடாளுமன்றப் பணிக்காலத்தில் அதற்கு உண்டான சேவைகளைச் செய்வதற்கே நேரம் போதாது. இதில் அவர்கள் கோப்புகளுடனும், அதனை ஒப்படைத்த இளம் வக்கீல்களுடனும் வழக்கு நடத்துவதற்குப் பெரும் நேரத்தைச் செலவிடுவது அவர்களை எந்தக் காரணத்துக்காகத் தேர்ந்தெடுத்தார்களோ அக்காரணத்தையே முறியடித்துவிடும்" என்று தன் பார்வையை சந்துரு முன் வைத்துள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

போகி பண்டிகை அன்று ஏற்பட்ட புகையினால், தொடர் வண்டிகள் மற்றும் விமானங்கள் தாமதமானது குறித்த செய்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் இடம்பெற்றுள்ளது. புகையின் காராணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னைக்கு வந்த 9 சர்வதேச விமானங்கள் உட்பட 16 விமானங்கள் பெங்களூரு, ஹைதராபாத், திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டதாக அந்தச் செய்தி விவரிக்கிறது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

படத்தின் காப்புரிமை Getty Images

ஜம்மு காஷ்மீர் கல்வி அமைச்சர் அல்டாஃப் புகாரிக்கும், ராணுவ ஜெனரல் பிபின் ராவத்துக்கும் நடந்து வரும் வார்த்தை தாக்குதல் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் ராணுவ ஜெனரல், காஷ்மீர் பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கூறி இருந்தார். இதற்கு பதிலடியாக கல்வி அமைச்சர், "ராணுவ அதிகாரி அவருடைய பணியை பார்த்தால் மட்டும் போதும். அவருக்கு தொடர்பில்லாத விஷயத்தில் கருத்து தெரிவிக்க வேண்டாம்." என்று கூறியுள்ளதாக அந்த நாளிதழ் கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :