வழக்கு ஒதுக்கீடு விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்

தலைமை நீதிபதி படத்தின் காப்புரிமை NALSA.GOV.IN
Image caption தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா

உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாக நான்கு மூத்த நீதிபதிகள் குற்றஞ்சாட்டி இருந்த நிலையில், அவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒய்வு பெற்ற நீதிபதிகள் நான்கு பேர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு திறந்த கடிதம் எழுதியுள்ளனர்.

உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி சவன்ட், டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு, மற்றும் மும்பை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எச். சுரேஷ் ஆகிய நால்வரும் சேர்ந்து இக்கடிதத்தை தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.

முக்கிய வழக்குகளின் விசாரணையை முறையாக ஒதுக்கவில்லை என்ற தீவிரமான குற்றச்சாட்டை உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் முன்வைத்துள்ளனர் என்றும் தன்னிச்சையாக ஒரு குறிப்பிட்ட அமர்வுகளுக்கே முக்கிய வழக்குகள் ஒதுக்கப்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்திருந்ததும் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது நீதித்துறை நிர்வாகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீது மோசமான விளைவை ஏற்படுத்தி உள்ளதாக இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

வழக்குகளை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்குதான் உள்ளது என்பதற்காக, குறிப்பிட்ட முக்கிய வழக்குகளை எல்லாம் இளைய நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்கி தன்னிச்சையான முடிவு எடுப்பதாக அவர்கள் வைத்த குற்றச்சாட்டை தாங்கள் ஒப்புக்கொள்வதாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் நான்கு பேரும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

வழக்கு விசாரணையை அமர்வுகளுக்கு ஒதுக்குவது என்பது, நியாயமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் இருக்க தெளிவான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீதித்துறை மீதும் உச்சநீதிமன்றம் மீதும் பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மீட்டெடுக்க உடனடியாக இதனை செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை, முக்கிய வழக்குகள் அனைத்தையும் ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றம் நியாயமாகவும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது மற்றும் சில முக்கிய வழக்குகளில் குறிப்பிட்ட தீர்ப்புகளை பெற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை என்பதை மக்களுக்கு உறுதி செய்ய இதுபோன்ற நடவடிக்கை தேவை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதியை, ஓய்வு பெற்ற நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்