விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வுதான் என்ன?: சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் சாய்நாத்

படத்தின் காப்புரிமை THEFINALMIRACLE

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையன்று மகாராஷ்டிராவின் நாசிக்கிலிருந்து பல்வேறு கோரிக்கைகளுடன் தொடங்கிய விவசாயிகளின் பிரம்மாண்ட பேரணி நேற்று காலை மும்பையை அடைந்து, பிறகு அம்மாநில அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

பிபிசி மராத்தி சேவையை சேர்ந்த அபிஜித் காம்ப்ளே இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத்திடம் பேசினார்.

1. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாசிக்கிலிருந்து மும்பை வரை தொலைதூர பேரணி நடத்திய விவசாயிகள் நடத்திய போராட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

பேரணி தொடங்கும்போது சுமார் இருபதாயிரமாக இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை அது நிறைவுறும்போது ஐம்பதாயிரத்தை கடந்திருந்தது. அங்கு நிலவும் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மிகவும் வறிய நிலையிலுள்ள 60 அல்லது 70 வயதான பெண்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசாங்கம் காது கொடுத்து கேட்க வேண்டும். கிராமப்புற துயரங்களின் நெருக்கடி பற்றி அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும்.

படத்தின் காப்புரிமை RAHUL RANSUBHE / BBC

2. கடன் தள்ளுபடியை முறையாக செயற்படுத்த வேண்டுமென்பது விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்றாக உள்ளது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் அவர்களுக்கு பலனை அளிக்கவில்லை என்று நினைக்கிறீர்களா?

மாநில அரசாங்கத்தின் கடன் தள்ளுபடி திட்டம் சரியான முறையில் செயற்படும் வகையில் உருவாக்கப்படவில்லை. அரசாங்கம் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்வதை பற்றி மட்டுமே பேசிவரும் நிலையில், அவர்கள் பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்துதான் கடன் பெற்றுள்ளார்கள். அதுகுறித்து அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் இல்லை.

பிரணாப் முகர்ஜி தொடங்கி அருண் ஜெட்லி வரை அனைத்து நிதியமைச்சர்களும் விவசாய கடன்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், அந்த நிதியானது விவசாயிகளிடம் செல்லாமல், விவசாய வியாபாரம் செய்பவர்களிடம்தான் செல்கிறது என்பதே உண்மை.

நீரவ் மோதி மற்றும் விஜய் மல்லையா போன்றவர்கள் அதிகளவிலான கடன்களை பெறும் நிலையில், ஒரு விவசாயியால் வெறும் ஐம்பதாயிரம் கடனைக் கூட எளிதாக பெறமுடியவில்லை.

3. விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் குறித்து சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விவசாயிகளுக்கு பலன் அளிக்குமா?

குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய திட்டம் என்பது சுவாமிநாதன் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையாகும். குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்யும்போது விவசாயிகள் பயிர்களை வளர்ப்பதற்காக பயன்படுத்தும் விதைகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களின் வருமானம் உள்ளிட்டவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென்று கூறுகிறது. எனவே, மேற்கூறியவற்றையெல்லாம் கணக்கில்கொள்ளாத அரசாங்கத்தின் இத்திட்டமானது வெறும் கண்துடைப்பே ஆகும். மேலும், இது விவசாயிகளுக்கு எவ்விதத்திலும் உதவப்போவதில்லை.

படத்தின் காப்புரிமை TWITTER / @PARINETWORK
Image caption மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத்

4. விவசாயிகளின் துயரம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மேலும் அதிகரித்துவிட்டதென்று கருதுகிறீர்களா?

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் படும் துயரத்தின் அளவு கண்டிப்பாக அதிகரித்துள்ளது. இந்நிலையானது, கடந்த இருபதாண்டுகளுக்கு முன்னர் தாராளமயமாதல் கொள்கை அமல்படுத்தப்பட்டது முதல் இருந்து வந்தாலும், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அது மேலும் மோசமடைந்துள்ளது என்று கூறலாம். பாரதிய ஜனதா கட்சிக்கு விவசாயத்தை பற்றி ஒன்றுமே தெரியாது.

5. விவசாயிகளின் இந்த கோபம் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொளிக்குமா?

தேர்தல்கள் என்பது இன்னமும் மிகவும் சிக்கலான பிரச்சனையாகும். மகாராஷ்டிராவில் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் 65,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கான சங்கங்கள் வலுவாக உள்ள நிலையில், நாட்டின் மற்ற இடங்களில் இதுபோன்ற சூழ்நிலை காணப்படுவதில்லை. கடந்த 2004 ஆம் ஆண்டு ஆந்திராவில் ஏற்பட்ட விவசாயிகளின் கோப அலை சந்திரபாபு நாயுடு தோற்பதற்கு காரணமாக அமைந்தது. தேர்தல் நெருங்கி வருவதால் வகுப்புவாதத்தை நோக்கிய வலுவான பிரசாரம் இருக்கும். குறிப்பாக அடுத்த சில மாதங்களுக்கு கர்நாடகாவில் வகுப்புவாதம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் வெடிப்பதற்கு வாய்ப்புள்ளது.

விடயங்கள் இன்னும் மோசமாக போகிறது. தேர்தல்களில் வெற்றியை நிர்ணயிக்கும் மேலும் பல்வேறு காரணிகள் உள்ளன. எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி செயல்படுகிறதா, இல்லையா என்பதும் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும்.

படத்தின் காப்புரிமை STEVEALLENPHOTO

6.விவசாய தற்கொலைகள் இன்னமும் தொடர்வதற்கான காரணமென்ன?

அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கடன் கட்டமைப்பை அழித்தன. எனவே, வங்கிகள் தாங்கள் விவசாயிகளுக்கு அளிக்கும் கடனை நிறுத்திவிட்டு அதை மத்திய வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கும், மேல் நடுத்தர வர்க்கம் மற்றும் நீரவ் மோதி போன்றவர்களுக்கும் வழங்க தொடங்கியது. கடந்த இருபதாண்டுகளில் மட்டும் விவசாய குடும்பங்களின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ள நிலையில், அவர்களுக்கு ஒதுக்கப்படும் கடன் அளவு அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் விவசாயிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு திசைத்திருப்பி வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக போட்டியிடும் அரசாங்கங்களே இந்த நாட்டின் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை பிரச்சனையாகும்.

7. விவசாயிகளின் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுதான் என்ன?

சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். வேளாண்துறையில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மட்டும் விவாதிப்பதற்காகவே நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடத்தப்படவேண்டும். அக்கூட்டத்தில் மூன்று நாளுக்கு ஒரு விவசாய பிரச்சனை தேர்ந்தெடுக்கப்பட்டு அதுகுறித்து விவாதிக்கப்பட வேண்டும். டெல்லியிலுள்ள வல்லுனர்களின் பேச்சை கேட்பதை நிறுத்திவிட்டு, நாடெங்கும் உள்ள விவசாயிகள் சொல்வதை கேட்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: