இலங்கை மீதான விவாதம்: தலைப்பு மாறியது!

இந்திய நாடாளுமன்ற முகப்புத் தோற்றம் படத்தின் காப்புரிமை AP
Image caption இந்திய நாடாளுமன்ற முகப்புத் தோற்றம்

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக, இந்திய நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட இருந்த பிரச்சினை தொடர்பாக அலுவல் பட்டியலில் இருந்த வாசகங்கள் மாற்றியமைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் நேற்று புதன்கிழமை பிரச்சினை எழுப்புவதற்கு அனுமதியளிக்கப்பட்டு, அது அலுவல்கள் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தது.

குறிப்பாக, ‘இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை மீதான விவாதம்’- என்ற தலைப்பில் மக்களவையின் அலுவல்கள் பட்டியலில் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், நேற்று அவை தொடங்கியபோது, திருத்தியமைக்கப்பட்ட பட்டியல் என்ற விவரத்தின் அடிப்படையில், இலங்கைப் பிரச்சினை தொடர்பான விவாதம் பற்றிய அலுவல் குறிப்பு மட்டும் இடம் பெற்றிருந்தது.

அதில், ‘இலங்கைத் தமிழர்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும், அவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள மற்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் விவாதம்’ – என்று தலைப்பு மாற்றப்பட்டிருந்தது.

இது, குறிப்பாக தமிழக உறுப்பினர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தலைப்பை மாற்றியதற்கான காரணம் என்ன என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

ஆனால், அடுத்த வாரம் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போது இந்தக் குளறுபடி தொடர்பாகவும் உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.