மேயர் பதவிகள் அனைத்திலும் அதிமுக போட்டி

தமிழக முதல்வர் ஜெயலலிதா படத்தின் காப்புரிமை AP

தமிழ்நாட்டில் விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சிமன்றத் தேர்தலில், மாநிலத்தில் இருக்கும் பத்து மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெள்ளிக்கிழமையன்று அறிவித்துள்ளார்.

இதன்படி சென்னை மேயர் பதவிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சைதை துரைசாமியும், மதுரை மேயர் பதவிக்கு ராஜன் செல்லப்பாவும், கோவை மேயர் பதவிக்கு வேலுச்சாமியும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மொத்தமுள்ள 10 மேயர் பதவிகளில் ஆறு பதவிகளுக்கு பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டணிக் கட்சிகள் நிலை?

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் சில கட்சிகள் இருக்கும் நிலையில், மாநிலத்தில் மொத்தமிருக்கும் 10 மேயர் பதவிகளுக்கும் அதிமுக வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்திருப்பது அதன் கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியளிப்பதாக ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.

ஆனால், இந்த பிரச்சினையை அதிமுக தலைமையிடம் பேசி சரிப்படுத்தமுடியும் என்று நம்புவதாகவே இக்கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூறுகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலின் போதும் அதிமுக தலைமை இதேபோல தனது வேட்பாளர் பட்டியலை தன்னிச்சையாக அறிவித்திருந்தாலும் பிறகு கூட்டணி கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவிடம் கலந்து பேசி பிரச்சினையை தீர்த்திருந்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சட்டமன்றத் தேர்தல் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் சுமுக முடிவு எட்டப்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

காங்கிரஸ் தனித்துப் போட்டி

இதற்கிடையே, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியும், உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக இன்று அறிவித்திருக்கிறது.

உள்ளாட்சித்தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக திமுக தலைவர் மு கருணாநிதி ஏற்கெனவே அறிவித்து விட்ட நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே தங்கபாலு தமது கட்சியும் உள்ளாட்சித்தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அறிவித்திருக்கிறார்.