கூடங்குளம்: தமிழக முதல்வர் நிலைப்பாட்டில் மாற்றம்

தமிழக முதல்வர் படத்தின் காப்புரிமை AFP

கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினையில் சுமூகத் தீர்வு எட்டப்படும் வரையில், மேற்கொண்டு பணிகள் எதையும் தொடர வேண்டாம் என மத்திய அரசிடம் கோரியிருப்பதாகத் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.

மக்களுக்கு அச்சம் தரும் எந்த ஆபத்தான திட்டத்தையும் தனது அரசு ஊக்குவிக்காது என்றும், மக்களின் அச்சங்களை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தும் வண்ணம் நிதி அமைசர் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு குழு விரைவில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவிருப்பதாகவும் அறிக்கையொன்றில் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

இச்சூழலில் அணுமின் நிலையத்தை எதிர்த்து உண்ணாநோன்பு மேற்கொண்டிருக்கும் இடிந்தகரை பகுதி மக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடவேண்டும், பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவில் இடம்பெற முன்வரவேண்டும் என்றும் அவர் மேலும் கோரியிருக்கிறார்.

உண்ணாவிரதம்

கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையில் 127 காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கின்றனர். அவர்களில் 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்பு, அச்சம்கொள்ளத் தேவையில்லை என்று தான் முன்னர் கூறியிருந்ததாகவும், ஆனால் அப்படியும் மக்கள் கவலைகள் நீங்கியதாக்த் தெரியவில்லை. எனவேயே தனது அணுகுமுறையினை மாற்றிக்கொள்வதாக தமிழக முதல்வர் கூறுகிறார்.

அண்மையில் மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், தனக்கும் கூடங்குளம் திட்டத்திற்கும் தொடர்பில்லை என்ற ரீதியில் பேசியிருப்பதாகக் குறைகூறும் ஜெயலலிதா, மத்திய அரசு அணுமின்நிலையம் குறித்து அந்தப் பகுதி மக்களுக்கு தகுந்த விளக்கங்கள் அளிக்காமல் தன் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

மூன்று நாளில் நிலைப்பாடு மாறியது

மூன்று நாட்களுக்கு முன்புதான், பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இருக்கின்றன், மக்கள் அச்சப்பட்த்தேவையில்லை, உண்ணாநோன்புப் போராட்டம் கைவிடப்படவேண்டும் என வலியுறுத்திய தமிழக முதல்வர், திடீரென்று இப்படி மின்நிலையப் பணிகள் நிறுத்திவைக்கப்படவேண்டும் எனக் கோரியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்களுக்கான தொகுதிப் பங்கீடு கூட்டணிக் கட்சிகளுடன் இன்னமும் இறுதி செய்யப்படாத நிலையில், தேசிய முற்போக்கு திராவிடர் கழக்த் தலைவர் விஜயகாந்த் இடிந்த கரை மக்களை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.

பல்வேறு கட்சிகளும் அவ்வாறே செய்திருக்கின்றன.

இத்தகையதொரு சூழலில் அணுமின்நிலையத்திற்கு ஆதரவாகப் பேசுவது தனது அஇஅதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதியே ஜெயலலிதா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்க்கூடும் என்கின்றனர் சில நோக்கர்கள்.

இந்தச் செய்தி குறித்து மேலும்