சிதம்பரத்தை விசாரிக்க மத்திய அரசு எதிர்ப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 செப்டம்பர், 2011 - 15:45 ஜிஎம்டி
இந்திய உச்சநீதிமன்றம்

இந்திய உச்சநீதிமன்றம்

இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை உரிமக் கட்டணங்களை முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவும், தற்போதைய உள்துறை அமைச்சரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரமும் இணைந்து முடிவெடுத்ததாகவும், அதுதொடர்பாக அவர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தினார்.

உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை வந்தபோதே இந்த கோரிக்கையை சுவாமி விடுத்தார்.

அலைக்கற்றை உரிமங்கள் தொடர்பாக அனைத்து விவரங்களும் அப்போதைய நிதியமைச்சருக்குத் தெரிந்திருந்ததாகவும், அவர் நினைத்திருந்தால் முறைகேடு நடக்காமல் தடுத்திருக்க முடியும் என்றும் தற்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை கடந்த வாரம், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் சுவாமி. அது தொடர்பாக செவ்வாய் கிழமை விசாரணை நடந்தது.

அலைக்கற்றை உரிமம் வழங்கப்பட்டது, ராசாவுக்கு மட்டுமன்றி, ப. சிதம்பரத்துக்கும் தெரிந்துள்ளது என்று கூறிய சுப்ரமணியன் சுவாமி, அதுதொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணை அரைவேக்காட்டுத்தனமாக உள்ளது என்று குற்றம் சாட்டினார். தான் தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். எல்லாப் பழியையும் ராசா மீதே போட்டுவிட்டு சிதம்பரம் தப்ப முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அந்த விசாரணை மூலம் நீங்கள் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று கேட்டார்கள். உரிமக் கட்டணங்களை நிர்ணயித்தது தொடர்பாக ராசாவும் சிதம்பரமும் சேர்ந்து முடிவெடுத்தார்களா என்பதைத்தான், தான் அறிய விரும்புவதாக சுப்ரமணியன் சுவாமி சுட்டிக்காட்டினார்.

மேலும், விசாரணை நீதிமன்றத்தால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்பதால், உச்சநீதிமன்றத்தை நாடியதாக சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.

எதிர்ப்பு

உள்துறை அமைச்சர் ப சிதம்பரம்

உள்துறை அமைச்சர் ப சிதம்பரம்

அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.பி. ராவ், சுவாமி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் புதிய உத்தரவு எதையும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், சுவாமி தாக்கல் செய்துள்ள புதிய ஆவணங்களை சிபிஐ ஆய்வு செய்து, விசாரணை தொடர்பாக அடுத்த நிலவர அறிக்கையில் விவரங்களைத் தெரிவிக்கும் என்று ராவ் கூறினார். அதற்கு, சிபிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் ஆட்சேபம் தெரிவித்தார். சிபிஐ சுயாதீனமாக செயல்படக்கூடிய சுதந்திரமான அமைப்பு என்றும், அது எவ்வாறு செயல்பட வேண்டும் என மற்றவர்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

சுவாமி குறிப்பிடும் புகார்கள் உள்பட அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும், ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் அளித்த 500 பக்க அறிக்கையில் உள்ளதாகவும், அதனால் அதுதொடர்பாக சிபிஐ ஏற்கெனவே விசாரணை நடத்திவிட்டதாகவும், புதிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்றும் வேணுகோபால் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஆ. ராசா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுஷில்குமார், புதிய விசாரணைக்கு உத்தரவிட்டு, எமது கட்சிக்காரர்களுக்கு ஜாமீன் கிடைக்க மேலும் தாமதப்படுத்திவிடாதீர்கள் என்று வலியுறுத்தினார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.