மத்திய அரசு மீது ஜெயலலிதா கடும் விமர்சனம்

முதல்வர் ஜெயலலிதா படத்தின் காப்புரிமை AFP
Image caption முதல்வர் ஜெயலலிதா

இந்திய அரசு சமீபத்தில் எடுத்துள்ள பல நடவடிக்கைகள், பாசிஸ மற்றும் ஜனநாயக விரோதப் போக்குக் கொண்டவை என்று மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாகச் சாடியிருக்கிறார்.

தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டம் சனிக்கிழமை, டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. அதில் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றார்கள். தமிழக முதலமைச்சர் சார்பில், நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கலந்துகொண்டு, ஜெயலலிதாவின் உரையை வாசித்தார்.

கடந்த சில மாதங்களாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், பாசிஸ மற்றும் ஜனாநயக விரோதமானவை என்று குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்புச் சட்ட மசோதா தொடர்பாக சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்த மசோதா, மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து, எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசிடமே குவிக்கும் நடவடி்க்கை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

பொம்மை வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து, மாநில அரசுகளை 356-வது பிரிவின் கீழ் கலைப்பது கடினம் என்பதால், புதிய சட்டத்தின் மூலம் மாநில அரசுகளைக் கலைப்பதாக தொடர்ந்து மிரட்டுவதற்கும் அது பயன்படுத்தப்படும் என்று ஜெயலலிதா அச்சம் வெளியிட்டிருக்கிறார்.

பாரபட்சம்

காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடந்துகொள்வதாக முதல்வர் புகார் கூறியுள்ளார். தமிழக அரசு சிறப்பு நிதி, திட்டம் கோரிய போதிலும் அது ஏற்கப்படவில்லை. ஆனால், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, மத்தியில் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காரணத்தால், மேற்கு வங்கத்துக்கு சிறப்பு நிதியுதவி அளிக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விலை உய்ர்வு காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுல்ள நிலையில், மத்திய அரசு அதைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மேலும் ஏற்றி மக்களின் சுமையை இன்னும் அதிகரித்துக் கொண்டிருப்பதாக ஜெயலலிதா சாடியுள்ளார்.

மாநில அரசுகளுக்கு முன்பு மத்திய அரசு வழங்கி வந்த நிதி, இப்போது மத்திய அரசு திட்டம் என்ற பெயரில் செலவிடப்படுவதாகவும், அது பெரிய அண்ணன் மனப்போக்கு என்றும் முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். அந்தத் திட்டங்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை என்றும், கள நிலவரத்தை மத்திய அரசு புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா மீது தாக்குதல்

மீனவர் பிரச்சினையைப் பற்றிப் பேசியுள்ள ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாகவும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அத்தகைய தாக்குதல்கள் இந்தியா மீதான தாக்குதல்களாகவே கருதப்பட வேண்டும். அதைத் தடுக்கத் தவறுவது, மத்திய அரசு தனது பொறுப்பிலிருந்து நழுவும் செயல் என்று கடிந்துகொண்டிருக்கிறார்.

மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண, கடலின் ஆழமான பகுதியில் மீன் பிடித்தல், புதிய மீன்பிடி துறைமுகம், தற்போதுள்ள துறைமுகங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்காக தமிழகம் நிதியுதவி கோரிய போதிலும், அது கண்டுகொள்ளப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. எதிர்காலத்திலாவது, அரசு அதை சாதகமாகப் பரிசீலிக்கவேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.