இடம்மாறுகிறது நூலகம், மருத்துவமனை வருகிறது: ஜெ

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 நவம்பர், 2011 - 16:22 ஜிஎம்டி
கோட்டூர்புரத்தில் உள்ள நூலகக் கட்டிடம்

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் இப்போது இடம் மாறவிருக்கிறது.

அது நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. (பொதுக்கல்வி இயக்குநரகத்தின்) வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும், தற்போது நூலகம் அமைந்துள்ள இடம் குழந்தைகளுக்கான உயர் சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயல்லிதா அறிவித்திருக்கிறார்.

டி.பி.ஐ. வளாகம் ஒருங்கிணைந்த அறிவு சார் பூங்காவாக மாற்றப்படும் என்றும், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து இயக்ககங்கள், பயிற்சி மையம், கூட்டரங்குகள், பள்ளிக் குழந்தைகளுக்கான அறிவுசார் பட்டறைகள், விளையாட்டு வளாகம், கல்வி தொலைக்காட்சி படப்பதிவு நிலையம், பேஷன் சென்டர் மற்றும் நவீன மைய நூலகம் அனைத்தும் அந்த ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா வளாகத்தில் அமையும் என்று ஜெயலலிதா அறிக்கை ஒன்றில் கூறியிருக்கிறார்.

டி.பி.ஐ. வளாகம், கன்னிமாரா மைய நூலகம் மற்றும் தேசிய வைப்பு நூலகத்திற்கு மிக அருகில் உள்ளதால், நவீன மைய நூலகத்தினை அறிவுசார் பூங்காவிலேயே அமைப்பது பொருத்தமாகவும், சிறந்ததாகவும் அமையும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும், குழந்தைகள் நலனுக்கென உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவதன் மூலம், குழந்தைகள் நலனை பேணிப் பாதுகாப்பதில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழும் என்பது உறுதி என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.

அடுத்தடுத்த இடமாற்றம்

ஏற்கெனவே முந்தைய முதல்வர் கருணாநிதி தனி அக்கறை காட்டி பல கோடி ரூபாய் செலவில் வேகவேகமாக கட்டப்ப்ட்ட புதிய தலைமைச் செயலக வளாகம் அதி நவீன் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்போது நூலகமும் மாற்றப்படவிருக்கிறது.

கோட்டூர்புரம் நூலகத்தை நிறுவுவதிலும் முந்தைய அரசு சிறப்புக் கவனம் காட்டியது என்பது குறிப்பிட்த்தக்கது.

விமர்சனம்

எட்டு ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் அப்பிரம்மாண்டமான நூலகம் பலரின் பாராட்டுதலையும் வரவேற்பையும் பெற்று, ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் பயன்படுத்தும் அதனை மாற்ற அரசு முடிவெடுத்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை அளித்திருப்பதைப் போன்றே தெரிகிறது.

தமிழக அரசின் இட மாற்ற அறிவிப்பு குறித்து என்ன செய்யவேண்டுமென்பதை தன்மானமுள்ள தமிழர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோர் முடிவுக்கே விட்டு விடுகிறேன்’ வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை’’ என்று திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு வளாகமாக இருக்கும் கோட்டூர்புரம் நூலகத்தை இடமாற்றம் செய்வது அரசியல் முதிர்ச்சியைக் காட்டவில்லை, மக்களின் நலனுக்கெதிரானது, எனவே முடிவை எதிர்த்து கல்வியாளர்கள், புத்தக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரைத் திரட்டி மாநிலந் தழுவிய போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எச்சரித்திருக்கிறது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.