கருத்தைத் திரும்பப் பெற்றார் ப சிதம்பரம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 டிசம்பர், 2011 - 16:36 ஜிஎம்டி
ப சிதம்பரம்

ப சிதம்பரம்

முல்லைப் பெரியாறு விவகாரத்தையும் கேரளாவில் விரைவில் நடக்கவுள்ள ஒரு இடைத்தேர்தலையும் தொடர்பு படுத்திப் பேசியதை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் சனிக்கிழமையன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் கேரளாவில் விரையில் நடக்கவுள்ள இடைத் தேர்தல் காரணமாகத்தான் முல்லைப் பெரியாறு பிரச்சினை பெரிதாக கிளப்பப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

மத்திய அரசில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர் இது போல பேசியது தவறு என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மத்திய அமைச்சர் தாமஸ் உள்ளிட்ட கேரள காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இது குறித்த தமது கண்டனங்களை காங்கிரஸ் தலைமையிடம் தெரிவிப்போம் என்று தெரிவித்திருந்தனர்.

முதிர்ச்சியின்மை

வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகார அமைச்சரான வயலார் ரவி, சிதம்பரத்தின் இந்தப் பேச்சு அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுவதாக சாடியிருந்தார்.

தனது கருத்துக்கு காங்கிரஸ் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் பெரியாறு அணைப் பிரச்சினையோடு விரைவில் நடக்கவுள்ள இடைத்தேர்தலை தொடர்பு படுத்திப் பேசியதை தான் திரும்பப் பெறுவதாக உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரம், டில்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஒட்டலுக்கு சாதகமாக செயல்பட்டதான குற்றச்சாட்டு என ப. சிதம்பரத்தை எதிர்கட்சிகள் நெருக்கும் நிலையில் தற்போது அவரது சொந்தக் கட்சியினரிடம் மற்றொறு பிரச்சனையில் உள்துறை அமைச்சர் மாட்டிக் கொண்டுள்ளார்.

அதேநேரம் ரஷ்யப் பயணத்தை முடித்து நாடு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் இரு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே கேரள அரசு மதித்து செயல்படாத நிலையில் பேச்சுவார்த்தைகளால் எவ்விதப் பயனும் ஏற்படப்போவதில்லை என்பதே தமிழகத்தின் நிலைப்பாடாக இருக்கிறது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.