கூடங்குளம் - நிபுணர் குழு அறிக்கை சமர்பிப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 பிப்ரவரி, 2012 - 14:04 ஜிஎம்டி
முதல்வருடன் நிபுணர் குழுவினர்

முதல்வருடன் நிபுணர் குழுவினர்

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதா என்பதை ஆய்ந்தறிய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தனது அறிக்கையினை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் செவ்வாய்க் கிழமை சமர்ப்பித்த்து.

குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இனியன் பலதரப்பினரையும் சந்தித்த பிறகு தீர ஆய்ந்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை அது என்று மட்டும் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆனால் குழுவினர் அறிக்கை பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். அரசு தரப்பிலிருந்தும் இது அறிக்கை குறித்த எவ்வித விளக்கமும் வெளியிடப்படவில்லை.

அதே நிலைப்பாடு

நீங்கள் அணுமின்நிலையங்கள் பாதுகாப்பானது என்றுதானே கூறிவந்திருக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் குழு உறுப்பினர் முன்னாள் அணுசக்திக்கழகத் தலைவர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசனிடம் கேட்டபோது என் நிலையை நான் மாற்றிக்கொள்ளவில்லை என்றுமட்டும் அவர் பதிலளித்தார்

அணுமின்நிலையம் பாதுகாப்பானது என்று குழுவின் அறிக்கைக் கூறியிருப்பதாக சில தொலைக்காட்சிகள் வெளியிட மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி குழுவின் அறிக்கையை வரவேற்றிருக்கிறார், விரைவில் அணுமின்நிலையம் செயல்பட்த்துவங்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

நாடுகடத்தல்

இதனிடையே கூடங்குளம் போராட்டக்குழுவுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டி அளித்து வந்த்தாக ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சோன்டெக் ரெய்னர் ஹெர்மன் என்பவர் நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டுள்ளார்.

நாகர்கோவிலில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர் அணு மின்நிலைய எதிர்ப்பாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார், என்று கூறி போலீசார் அவரை சென்னைக்கு அழைத்துவந்து இன்று அதிகாலை ஜெர்மனிக்கே வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பிவைத்தனர்.

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரோ, ரெய்னர் ஹெர்மான் ஜெர்மனியில் கம்ப்யூட்டர் நிபுணராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.ஒவ்வொரு நாட்டின் கலாசாரத்தையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர். அந்த வகையில் இந்தியாவுக்கு வந்தபோது குமரி மாவட்டத்துக்கு வந்து தங்கியுள்ளார், போராட்டக்குழு உறுப்பினர் நாகர்கோவிலைச் சேர்ந்த விஞ்ஞானி லால்மோகன் நடத்தும் நிகழ்ச்சிகளில்கூட ஹெர்மன் பங்கேற்றுள்ளார். அதைதவிர எங்களிடையே எந்த அரசியல் பின்னணியும் மறைமுக தொடர்பும் இருந்ததில்லை. போராட்டத்துக்காக பண பரிவர்த்தனையோ, கொடுக்கல்- வாங்கலோ நடக்கவில்லை எனக்கூறியிருக்கிறார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.