மெர்வின் சில்வாவின் கருத்துக்களை ஆதரிக்கவில்லை- யாப்பா

மெர்வின் சில்வா படத்தின் காப்புரிமை BBC Sinhala
Image caption அமைச்சர் மெர்வின் சில்வா

இலங்கையின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் பத்திரிக்கையாளர்களின் கை கால்களை முறிப்பேன் என்று சர்ச்சைக்குரிய அமைச்சர் மெர்வின் சில்வா விடுத்த மிரட்டலானது, அரசின் கொள்கையை பிரதிபலிக்கவில்லை என்று ஊடக அமைச்சர் லஷ்மண் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சர் என்ற முறையில் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை என்பதை தன்னால் கூற முடியும் என்றார் அவர். சில நிருபர்களின் புகைப்படங்கள் தொலைக் காட்சி மூலம் காட்டப்பட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதாகவும் உடனே தான் அதை நிறுத்திவிட்டதாகவும் யாப்பா தெரிவித்தார்.

தலைநகர் கொழும்பை ஒட்டிய தனது தொகுதியில் இலங்கைக்கு எதிராக ஐநா மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக நடந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மெர்வின் சில்வா, இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்கள் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களின் கை கால்களை உடைப்பேன் என்று எச்சரித்திருந்தார்.

சுனந்த தேசப்பிரிய, நிமால் பெர்னாண்டோ, பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோரைப் பெயர் குறிப்பிட்டுச் சொல்லி அவர் இந்த அச்சுறுத்தலை விடுத்தார்.

ஆனால் இலங்கையில் உண்மையில் ஊடகவியலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் இது குறித்து தவறான தகவல்கள் பரவியுள்ளதாகவும் ஊடக அமைச்சர் பிபிசியிடம் கூறினார்.

இதற்கிடையே, இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கருத்துகள் தொடர்பில் காவல்துறை விசாரணை நடத்தும் என்று காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹன பிபிசியிடம் தெரிவித்தார்.