ஷாருக் கான் மைதானத்துக்குள் நுழைய தடை?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 மே, 2012 - 10:23 ஜிஎம்டி
சம்பவம் தொடர்பில் ஷாருக் கான் இன்னும் கருத்து வெளியிடவில்லை

சம்பவம் தொடர்பில் ஷாருக் கான் இன்னும் கருத்து வெளியிடவில்லை

ஹிந்தி சினிமா நட்சத்திரம் ஷாருக் கான் மும்பையிலுள்ள வான்கடே விளையாட்டு மைதான அரங்கத்தில் இருந்த பணியாளர்களுடன் மோதலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், இனிமேல் அந்த மைதானத்துக்குள் நுழைய முடியாதபடி தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டியொன்றின்போது, நடிகர் ஷாருக் கான் மைதான பணியாளர்களுடன் தகாதமுறையில் நடந்துகொண்டார் என்று மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.


நேற்று புதன்கிழமை இரவு, ஷாருக் கான் விளையாட்டு அரங்கத்துக்குள் நுழையவிடாது தடுக்கப்பட்ட போது, இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


ஷாருக் கானுக்கு எதிராக காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரிகள் கூறினர்.


நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் தான் நடிகர் ஷாருக் கான். தன்மீதான குற்றச்சாட்டு குறித்து அவர் இதுவரை கருத்து வெளியிடவில்லை.


'ஷாருக் கானை இனிமேல் குறித்த மைதானத்துக்குள் நுழைய அனுமதிக்காதபடி தடை விதிக்க வேண்டும் என்று மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் மனுச் செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மை முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தேஷ்முக் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.


ஷாருக் கானை அமைதிப்படுத்த மைதான பணியாளர்கள் முயன்ற போதிலும் அது நடக்கவில்லை என்றும் அவர் கூறினார்.


'மிக மோசமான தகாத வார்த்தைகள் அங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


ஹிந்தி சினிமா உலகில் முன்னணி நடிகராக விளங்கும் ஷாருக் கான் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தவிர, பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளதுடன் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.