குடியரசு துணைத் தலைவர்: மீண்டும் அன்சாரியை களமிறக்க முடிவு

துணை இந்தியக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption தற்போதைய இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள உள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவருக்கான வேட்பாளராக தற்போது அந்தப் பதவியி்ல் இருக்கும் ஹமீத் அன்சாரியையே மீண்டும் களமிறக்க ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முடிவெடுத்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில், கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பான அறிவிப்பை சோனியா காந்தி வெளியிட்டார்.

'ஹமீத் அன்சாரி அவர்கள், குடியரசுத் துணைத் தலைவர் பதவியை விரைவில் நிறைவு செய்ய இருக்கிறார். அவர் அவையை மிகக் கன்னியமாக நடத்தியிருக்கிறார். இந்நிலையில், அவரையே குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக மீண்டும் நிறுத்துவதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெருமிதமடைகிறது’ என்றார் சோனியா காந்தி.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சிதம்பரம், அன்சாரியை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோரிடம் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாகவும், அவர்கள் இருவருமே அந்த முடிவை வரவேற்றதாகவும் தெரிவித்தார்.

மேலும், கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பாஜக மூத்த தலைவர் அத்வானியுடனும் மன்மோகன் சிங் பேசியதாகவும், அன்சாரிக்கு பெருவாரியான ஆதரவு இருக்கும் என்று கருதுவதால் பாஜகவும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், திமுக சார்பில் டி.ஆர். பாலு பங்கேற்றார். ஏற்கனவே, இன்று காலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, அன்சாரி அவர்கள்தான் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அவரை திமுக ஆதரிக்கும் என்றும் திமுகவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தார்.

அதேநேரம், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதா இல்லையா என்பதை இன்னும் அறிவிக்காதுள்ள இன்னொரு கூட்டணிக் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் ரயில்வே் அமைச்சர் முகுல் ராய் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டார்.

ஆனால், தமது கட்சியின் நிலைப்பாட்டை அவர் வெளியிடவில்லை. இன்றைய முடிவு குறித்து தனது கட்சியுடன் கலந்துபேசிய பின்னர் தான் முடிவு அறிவிக்கப்படும் என்று முகுல்ராய் தெரிவித்தார்.

பாஜக ஆதரவளிக்குமா?

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு குடியரசுத் துணைத் தலைவராகப் போட்டியிட்ட ஹமீத் அன்சாரியை அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளித்து வந்த இடதுசாரிக் கட்சிகள் முன்னிறுத்தின. அதற்கு ஆளும் கூட்டணியும் ஆதரவளித்தது.

ஆனால் இப்போது இடதுசாரிக் கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றன என்பது தெளிவாகவில்லை. கடந்த வாரம், பிரதமர் மன்மோகன் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தைத் தொடர்பு கொண்டு பேசியபோது, குடியரசுத் துணைத் தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சே்ர்ந்தவராக இருக்கக் கூடாது என அவரிடம் கூறியதாக காரத் தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சியான பாஜக, அன்சாரிக்கு ஆதரவளிப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இரண்டாவது முறையும் வெற்றி பெற்றால், சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு பின்னர், தொடர்ந்து இரண்டாவது முறையாக குடியரசுத் துணைத் தலைவர் பதவியைப் பெறுபவர் என்று பெருமை அன்சாரிக்கு கிடைக்கும்.

75 வயதான அன்சாரி, இந்திய ராஜீய அதிகாரியாகப் பணியாற்றியவர். அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.