'இந்திய எதிர்ப்பு தொடர்வதால் புலிகள் மீதான தடை அவசியம்'

புலம்பெயர் தமி்ழர்கள் இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய அரசு குற்றஞ்சாட்டுகிறது
Image caption புலம்பெயர் தமி்ழர்கள் இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய அரசு குற்றஞ்சாட்டுகிறது

விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் இந்திய மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் கூறி, அந்த இயக்கத்தின் மீதான

தடையை இந்திய அரசு நீடித்திருக்கிறது.

இந்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளின் நடவடிக்கை, இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருப்பதால் அதன் நடவடிக்கைகளை சாத்தியமான அனைத்து வழிகளிலும் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமாகிறது என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக, அதனை சட்டவிரோத அமைப்பு என்று தடை செய்ய வேண்டியது அவசியமாகிறது என்று உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் தர்மேந்திர ஷர்மா வெளியிட்டுள்ள அறிவிக்கை தெரிவிக்கிறது.

'பிரிவினைவாத தமிழ்ப் பேரினவாதிகளும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், மக்களிடையே தொடர்ந்தும் பிரிவினை எண்ணத்தை விதைத்து வருகிறார்கள். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு தளத்தை அதிகரிக்க முயன்று வருகிறார்கள். அது கடைசியில், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை உண்டாக்கிவிடும்’ என உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

'வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள்'

Image caption ராஜீவ் காந்தி 1991ல் கொல்லப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது.

'புலம் பெயர் தமிழர்கள் இணைய தளங்கள் மூலமாக தொடர்ந்து இந்திய எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோல்விக்கு இந்தியாவின் உயர் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும்தான் காரணம் என்று இலங்கைத் தமிழ் மக்களிடையே இந்திய எதிர்ப்பு உணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட பிரசாரம், இந்தியாவில் மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதமுள்ள உறுப்பினர்கள், அதிலிருந்து வெளியேறியவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் சமீபத்தில் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதைத்தான் இது காட்டுகிறது’ என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது இந்தியாவின் கொள்கையையும், அந்த இயக்கத்தை ஒடுக்க அரசு இயந்திரங்கள் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் விடுதலைப் புலிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் தீய நோக்கத்தோடு எதிர்த்து வருகிறார்கள் என அரசு கூறுகிறது.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், தனி ஈழம் என்ற கொள்கையை அவர்கள் கைவிட்டுவிடவில்லை. ஐரோப்பிய நாடுகளில், நிதி திரட்டல் மற்றும் பிரசார நடவடிக்கைகள் மூலம் ரகசியமாக தனி ஈழ கோரிக்கைக்கான செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என அந்த அறிக்கை கூறுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதமுள்ள தலைவர்கள் அல்லது உறுப்பினர்கள், உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் தங்கள் இயக்கத்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் கூறி அந்த இயக்கத்தின் மீதான தடையை நீடிப்பதற்கான காரணங்களை இந்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.