தமிழக அமைச்சரவையிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
Image caption முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் என்.டி.வெங்கடாசலம் புதிய வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.

மேலும் தலைமைக்கழக செயலாளர் பொறுப்பிலிருந்தும் செங்கோட்டையன் அகற்றப்பட்டிருக்கிறார்.

தொடக்க காலங்களிலிருந்து அ இஅதிமுக உறுப்பினராக இருந்துவரும் செங்கோட்டையன், முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர், அவரது பயணத்திட்டத்தை இறுதிசெய்பவர் என்றெல்லாம் கூறப்படுவதுண்டு.

கடந்த ஆண்டு மே மாதத்தில் மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற பின்னர், அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு மூன்றாவது இடம் எனக் கூறப்பட்டாலும் அவருக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத துறைகளாகவே வழங்கப்பட்டுவந்தன, கடந்த ஜனவரியில்தான் அவர் வருவாய்த்துறை அமைச்சரானார்.

அவர் ஏன் இப்போது அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் அல்லது கட்சிப் பொறுப்பை இழந்திருக்கிறார் என்பதற்கான விளக்கங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பதினொரு அமைச்சர்கள் பதவி இழந்திருக்கிறார்கள் , அவர்களில் ஒருவரான என்.ஆர்.சிவபதி மட்டும் பின்னொரு கட்டத்தில் மீண்டும் அமைச்சராகிவிட்டார்.

ஜெயலலிதாவையும் சேர்த்து தமிழக அமைச்சரவையில் இப்போது 33 பேர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.