குடியரசுத் துணைத்தலைவராக அன்சாரி மீண்டும் தேர்வு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 ஆகஸ்ட், 2012 - 15:16 ஜிஎம்டி
அன்சாரி

மீண்டும் வெற்றி

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக, ஹமீத் அன்சாரி அவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்சாரி அவர்கள், 490 வாக்குகள் பெற்று, எதிர்க்கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங்கை தோற்கடித்தார்.

செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை, நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப் பதிவு நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலில், நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்ததைப் போல் அல்லாமல், இந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்தார்கள்.

வாக்குள் எண்ணப்பட்டு, மாலையே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் அதிகாரியும் மக்களவைச் செயலருமான விஸ்வநாதன் இந்த முடிவுகளை அறிவித்தார்.

''ஜஸ்வந்த் சிங் 238 முன்னுரிமை வாக்குகளைப் பெற்றார். ஹமீத் அன்சாரி 490 முன்னுரிமை வாக்குகளைப் பெற்றார். குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 365 வாக்குகள் பெற வேண்டும். அதன்படி, ஹமீத் அன்சாரி அவர்கள் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்’’, என்றார் தேர்தல் அதிகாரி விஸ்வநாதன்.

மொத்தமுள்ள 787 வாக்குகளில், 736 வாக்குகள் பதிவாயின. அவற்றில் எட்டு வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. மீதமுள்ள 728 வாக்குளில், அதிகபட்ச வாக்குகள் அன்சாரிக்குக் கிடைத்தன.

இந்த வெற்றியை அடுத்து, சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றவர் என்ற பெருமையைப் பெறுகிறார் ஹமீன் அன்சாரி.

இ்த் தேர்தலில், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளைத் தவிர, அதிமுகவும் ஜஸ்வந்த் சிங்கிற்கு ஆதரவாக வாக்களித்தன.

அதே நேரத்தில், பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஆர்எஸ்பி உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் பங்கேற்கவில்லை.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.