மீனவர்கள் மீது தாக்குதல்: ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 ஆகஸ்ட், 2012 - 10:00 ஜிஎம்டி
இலங்கை கடற்படை

இலங்கை கடற்படை

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

தொடர்ந்து இந்திய மீனவர்கள் இவ்வாறு தாக்கப்பட்டாலும் இந்தியா இப்பிரச்சினையை மென்மையாகவே அணுகிவருவதால்தான் இப்படிப்பட்ட தாக்குதல்கள் தொடர்கின்றன என்றும் முதல்வர் தனது கடிதத்தில் குறை கூறியிருக்கிறார்.

வெள்ளப்பள்ளம் மற்றும் வானவன்மாதேவி கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேர் வெள்ளப்பள்ளம் கடல் அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அப்பக்கமாக டி-146 என்ற எண் தாங்கிய ஒரு கப்பலில் வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களைக் கடுமையாகத் தாக்கியதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

குப்புசாமி என்ற மீனவருக்கு மணிக்கட்டில் கத்திக்குத்துக் காயம் ஏற்பட்டது, மேலும் ஏழு பேர் ரப்பர் தடிகளால் தாக்கப்பட்டிருக்கின்றனர், அவர்களது ஐஸ் பெட்டிகள்,மீன்பிடி கருவிகள் மற்றும் உணவு போன்றவற்றை பிடுங்கி கடலில் எறிந்தும் வலைகளை அறுத்தெறிந்தும் பல்வேறு அத்துமீறல்களில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபட்டதாக ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.

இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமலிருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

இதேவேளை, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு தொடர்ந்தும் மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.