நிலக்கரி ஊழல்: இந்திய நாடாளுமன்றம் தொடர்ந்தும் முடக்கம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 ஆகஸ்ட், 2012 - 10:22 ஜிஎம்டி
இந்தி நாடாளுமன்றம்

'பாஜக மட்டும் தான் பதவி விலகுமாறு கோருகிறது': காங்கிரஸ்

இந்தியாவில் நிலக்கரிச் சுரங்கங்களை மலிவான விலையில் விற்றதன் மூலம் நடந்த ஊழல் தொடர்பில் பிரதமர் மன்மோகன் சிங் பதவியிலிருந்து விலக வேண்டுமென்று பிரதான எதிர்க்கட்சி தொடர்ந்தும் கோரி வருவதால் நாடாளுமன்றத்தின் பணிகள் தொடர்ந்தும் முடங்கியுள்ளன.

இந்த ஊழல் மூலம் அரசுக்கு ஒரு லட்சத்து எண்பத்தாராயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஊழல் நடந்துள்ள காலப்பகுதியில் அந்தத்துறைக்கு பொறுப்பாக இருந்த தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று பாரதீயா ஜனதா கட்சி கோரி வருகிறது.

2005-2009 காலப்பகுதியில் நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலம் விடப்படாமலேயே விற்கப்பட்டதாக அரசின் கணக்காய்வு அதிகாரிகள் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
சுயாதீனமான இந்த கணக்காய்வாளர்கள் மன்மோகன் சிங் மீது எவ்விதமான குற்றத்தையும் சுமத்தவில்லை.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் அறிவிக்குமாறு மன்மோகன் சிங் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

'விவாதங்களிலிருந்து பாஜக தப்பி ஓடுகிறது'

மன்மோகன் சிங் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே திருப்தியடையமுடியும் என்று பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்ற நிலையில் இன்று வியாழக்கிழமை மூன்றாவது நாளாகவும் நாடாளுமன்றம் முடங்கிப்போயுள்ளது.

ஆனால் இந்த விவகாரத்தில் பதவியை ராஜினாமா செய்வதற்கான தேவை இல்லை என்றும் பாரதீய ஜனதா கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியும் பிரதமரை நோக்கி குற்றம் கூறவில்லை என்றும் ஆளும் காங்கிரஸ் கட்சி கூறிவருகிறது.

பாரதீய ஜனதா கட்சி இந்த விடயம் தொடர்பில் விவாதத்தில் கலந்துகொள்ளாமல் நாடாளுமன்றத்தை விட்டு தப்பியோட பார்க்கிறது என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

உலகில் நிலக்கரியை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அண்மைக்காலமாக எதிர்கொண்டுவரும் நிதி ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளின் வரிசையில் இப்போது இந்த நிலக்கரி ஊழல் விவகாரமும் புதிய எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.