இந்தியா - பாகிஸ்தான் புதிய விசா உடன்பாடு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 செப்டம்பர், 2012 - 16:21 ஜிஎம்டி

எஸ்.எம்.கிருஷ்ணா - ஹினா ரப்பானி

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளிடையே நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட, தளர்த்தப்பட்ட விசா நடைமுறைகள் கையெழுத்தாகியிருக்கின்றன.

குழு சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுலா விசா, வர்த்தகப் பிரமுகர்களுக்கு தனி விசா, 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாட்டுக்குள் வந்த பிறகு விசா என்று அந்த ஒப்பந்தங்களில் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இஸ்லாமாபாத் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கிற்கும் இடையே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இதுவரை, மூன்று இடங்களுக்கு மட்டுமே செல்வதற்கு விசா அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், அது ஐந்து இடங்களாக அதிகரிக்கப்படுகிறது. 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முக்கிய வர்த்தகப் பிரமுகர்கள், போலீசில் தகவல் தெரிவி்க்க வேண்டியதில்லை. அதேபோல், மூன்று மாதங்களுக்கு பதிலாக இனி 6 மாதங்களு்ககு விசா வழங்கப்படும்.

இதன் மூலம், கடந்த 38 ஆண்டுகளாக இருந்த கடுமையான விசா நடைமுறைகள் தளர்த்தப்பட்டு, இருதரப்பு உறவுக்கு பல்வேறு வகைகளில் ஊக்கம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

மாணவர்கள் குழுவாக சுற்றுப்பயணம் செய்ய விசா வழங்கப்படும். ஆனால், அவர்கள் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு விசா வழங்கப்பட மாட்டாது.

இதற்கிடையி்ல், சனிக்கிழமையன்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கெர் உடன் எஸ்.எம். கிருஷ்ணா பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு இருவரும் செய்தியாளர்களிடம் பேசும்போது, இருதரப்பு உறவுகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.

எஸ்.எம். கிருஷ்ணா பேசும்போது, பாகிஸ்தான் தலைவர்களிடம் சாதகமான மாற்றத்தைக் காண்பதாகவும், அந்த மாற்றத்துக்கு ஹினா ரப்பானி கெர் முக்கியக் காரணமாக இருந்திருப்பதாகவும் பாராட்டுத் தெரிவித்தார். அதேபோல், ஹினா ரப்பானி பேசும்போது, மன்மோகன் சிங்கின் முன்னெடுப்புக்களைப் பாராட்டினார்.

இருதரப்பு பேச்சுக்கு முட்டுக்கட்டையா?

தீவிரவாதம், காஷ்மீர்

தீவிரவாதம் என்பது தொடர்ந்து ஒரு முக்கியப் பிரச்சினையாக இருப்பதாக கிருஷ்ணா தெரிவித்தார்.

''அமைதி மற்றும் பாதுகாப்புக்கு தீவிரவாதம் தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்பதை இருதரப்பும் ஒப்புக்கொண்டிருக்கிறது. அதுதொடர்பாக, பாகிஸ்தான் தலைவர்கள் தங்கள் முந்தைய உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார்கள். மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார்கள்,’’ என்றார் கிருஷ்ணா.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கெர் பேசும்போது, காஷ்மீர் தொடர்ந்து முக்கியப் பிரச்சினையாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

''இதுவரை இரு நாடுகளையும் பிரித்து வரும் காஷ்மீர், சியாச்சின் மற்றும் சர் கிரீக் போன்ற அனைத்துப் பிரச்சினைகளு்கும் தீர்வு காண முடியும். காஷ்மீர் பிரச்சினையில் அந்த மக்களின் அபிலாஷைகள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். அமைதியான தீர்வுக்கு, அவர்களையும், எங்களையும் உள்ளடக்கி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நம்பிக்கையை ஏற்படுத்தி, இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். காஷ்மீர் தொடர்ந்து முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. ஆனால், இரு நாடுகளையும் பிரிக்க நினைப்போரை முறியடிக்க நம்மால் முடியும். இரு நாட்டு உறவுகளை, பிராந்திய கண்ணோட்டதில், புதிய நோக்கில் பார்க்க வேண்டிய நிலைக்கு மாறியிருக்கிறோம்’’, என்று தெரிவித்தார் ஹினா ரப்பானி கெர்.

பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய பாகிஸ்தான் அதிபர் உத்தரவிட்டிருப்பதாகவும் ஹினா ரப்பான சுட்டிக்காட்டினார்.

இந்தியாவைப் பொருத்தவரை, காஷ்மீர், சியாச்சின் உள்பட அனைத்துப் பிரச்சினைகளிலும் இன்னும் கடுமையான நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடிப்பதாகவும், மற்ற பிரச்சினைகளுக்கும் மும்பை சம்பவ விசாரணைக்கும் முடிச்சுப் போடுவதாகவும் எண்ணத் தோன்றுகிறது என செய்தியாளர்கள் கேட்டபோது கிருஷ்ணா, அந்தக் கருத்தை மறுத்தார்.

இதுபோன்ற முக்கியப் பிரச்சினைகளையும், மும்பை பிரச்சினை தொடர்பாக ஏற்பட வேண்டிய விசாரணை முன்னேற்றங்களையும் தொடர்புபடுத்தி எப்போதும் பேசவில்லை. மற்ற பிரச்சினைகள் கடந்த 60 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே உள்ளன. அவற்றுக்கு நான்கு மணி நேர பேச்சுவார்த்தையில் தீர்வு கண்டுவிட முடியாது. படிப்படியாக முன்னேற்றம் காண்பதில்தான் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

அடுத்த படிக்கு அழைத்துச் சென்றவர்

மன்மோகன் தயங்கவில்லை

அதேபோல், பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எந்தவித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்றும் எஸ்எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

''பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு பிரதமர் தயக்கம் காட்டவில்லை. தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், பாகிஸ்தான் அதிபர், பிரதமர் அல்லது முக்கியத் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். இரு நாடுகளுக்கிடையிலான உறவை அடுத்த நிலைக்கு முன்னெடுத்துச் சென்றவர் பிரதமர் மன்மோகன் சிங்தான். நான் ஏற்கெனவே கூறியது என்னவென்றால், சாதகமான சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்பதுதான்’’, என்றார் எஸ்.எம். கிருஷ்ணா.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.