காவிரி: 'ஆணையம் மட்டுமே உத்தரவை மாற்றமுடியும்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 3 அக்டோபர், 2012 - 14:49 ஜிஎம்டி
காவிரி ஆறு

காவிரி ஆறு

தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு, காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர் மன்மோகன் சிங் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டுமானால், மீண்டும் காவிரி ஆணையம் கூடித்தான் முடிவெடுக்க முடியும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சல் தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பிரதமர் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடகம் கோரியிருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, அப்படிச் செய்ய முடியாது என்று பதிலளித்தார்.

`பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால், தலைவர் என்ற முறையில் பிரதமர் உத்தரவு பிறப்பிக்கலாம். அதன்படி, மாநிலங்களின் தேவைகளை ஆய்வு செய்து, தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 15 வரை தினசரி விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு பிரதமர் உத்தரவிட்டார்’’ என்று பன்சல் கூறினார்.

``தண்ணீர் திறந்துவிட பிரதமர் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக, காவிரி கண்காணிப்புக்குழு கள நிலவரம் என்ன, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை முடிவு செய்யும். மாநிலங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அதற்கான தேவை இருப்பதாகக் கருதினால் மட்டுமே ஆணையத்தை அவர்கள் அணுகலாம். பிரதமர் இதில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது’’ என்று அமைச்சர் பவன்குமார் பன்சல் தெரிவித்தார்.

கர்நாடக விவசாயிகள் அச்சம்

இதனிடையே, தமிழகத்துக்கு நீர் திறந்து விடப்படுவதால் தாம் பாதிக்கப்படுவோம் என்ற அச்சம் கர்நாடக விவசாயிகளிடம் இருப்பதாக காவிரி குடும்பம் என்ற அமைப்பைச் சேர்ந்த விவசாயி சுப்பையா தமிழோசையிடம் தெரிவித்தார்.

காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியாக சென்னை ஆபிவிருத்தி வளர்ச்சிக் கழகம் தமிழக – கர்நாடக விவசாயிகளை இணைத்து காவிரிக் குடும்பம் என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த அமைப்பைச் சேர்ந்த இரு மாநில விவசாயிகள் அவ்வப்போது சந்தித்து பேசி வருகின்றனர்.

காவிரி நீர் : கர்நாடக விவசாயிகள் கருத்து

காவிரி நீர் : கர்நாடக விவசாயிகள் கருத்து

தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்துவிட நேர்ந்துள்ள நிலையில், கர்நாடக மாநில விவசாயிகளின் அச்சங்கள் பற்றி கர்நாடக விவசாயி சுப்பையா

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

தமிழகத்தில் ஏற்கனவே குறுவைப் பயிர் சாகுபடி இழக்கப்பட்ட நிலையில், தண்ணீர் கொடுக்க கர்நாடக அரசு முரண்டுபிடித்து வருவதால் சம்பா பயிரும் என்னவாகும் என்ற அச்சம் நிலவுகிறது.

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் மொத்த கொள்ளளவில் 75 சதவீதம் வரை நீர் இருப்பதாக தமிழகம் கூறுவது சரியானது அல்ல என்று சுப்பையா தமிழோசையிடம் தெரிவித்தார்.

கர்நாடகாவில் பருவ மழை பொய்த்துப் போய்விட்டால், காவிரி உற்பத்தியாகும் குடகு மலைப் பகுதியில் கூட நிலமை மோசமாக இருப்பதாக காவிரிக் குடும்பத்தின் கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பையா தமிழோசையிடம் கூறினார்.

பருவமழை பொய்க்கும் காலங்களில் நீரை எப்படி பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பான வழிமுறைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை ஏற்க கர்நாடகா மறுக்கிறது. பஞ்ச காலத்தில் நீரை எப்படி பகிர்ந்து கொள்வது என்பது குறித்த வழிமுறைகள் அறிவியல்பூர்வமற்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ளன என்று சுப்பையா கூறினார்.

அதே நேரம் கர்நாடகாவில் தமிழகத்துக்கு நீரை தரக்கூடாது என்று கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இவை முன்புபோல கடுமையானதாக இல்லை என்றும் அது இரு தரப்பு விவசாயிகளின் நேரடிப் பேச்சுவார்த்தைகள் காரணமாக ஏற்பட்ட புரிதலால் வந்த தெளிவு எனவும் சுப்பையை கூறினார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.