தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர எதிர்ப்பு: கர்நாடகத்தில் முழு அடைப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 அக்டோபர், 2012 - 12:10 ஜிஎம்டி

பெங்களூர் மெட்ரோ ரயில்

தமிழ்நாட்டுக்குக் காவிரி நீர் திறந்துவிடுவதைக் கண்டித்து, கர்நாடக மாநிலத்தில் இன்று சனிக்கிழமை நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பெங்களூரும் முடங்கிப் போய்விட்டது.

காலையில் சில இடங்களில் அரசுப் பேருந்துகள் ஒன்றிரண்டு இயக்கப்பட்டன. ஆனால், சிறிது நேரத்துக்குப் பிறகு அவை கல்வீச்சுக்கு உள்ளானதால் அதுவும் தடைபட்டது. கல்வீச்சில் சில பயணிகள் காயமடைந்தனர்.

காலையில் பால் மற்றும் செய்தித்தாள்கள் தங்களுக்குக் கிடைத்ததாக பெங்களூர் நகரவாசிகள் தெரிவித்தனர்.

பெங்களூரில் மிகுந்த போக்குவரத்து நெரிசலைச் சந்தித்துவரும் சுற்றுச்சாலையிலும் ஒரு சில தனியார் வாகனங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. பல இடங்களில் தனியார் வாகனங்களில் செல்வோரை நிறுத்தி, டயர்களைக் கழற்றி, காற்றைப் பிடுங்குவிட்டு போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் மேலும் பலர் சாலைகளில் இறங்கவே அச்சப்படும் நிலை ஏற்பட்டது.

முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த கன்னட அமைப்பினர், பெங்களூர் நகரில் முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கேபிள் டி.வி. மூலம் தொலைக்காட்சி பார்க்கும் பொதுமக்கள், இன்று செய்திச் சேனல்களை மட்டுமே பார்க்க முடிந்தது. முழு அடைப்பு தினத்தன்று பொதுமக்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்த்து ஆனந்தமாக இருக்கக் கூடாது என்று கூறி, அத்தகைய சேனல்களை ஒளிபரப்பக் கூடாது என கன்னட அமைப்பினர் எச்சரித்திருந்தார்கள்.

ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்தவர்கள், தங்களுக்குரிய இடங்களுக்குச் செல்ல போக்குவரத்து வசதி இல்லாமல் தடுமாறினார்கள். ஒரு சில டாக்ஸிகள் மட்டும், மிக அதிகக் கட்டணத்தில் இயக்கப்பட்டன.

வெளியூரில் இருந்து பஸ் நிலையங்களில் வந்திறங்கியவர்களுக்கு மாற்று பஸ்கள் கிடைக்கவில்லை. கடைகள் ஏதும் திறக்காததால், உணவு மற்றும் குடிநீருக்கும் அவதிப்பட்டார்கள்.

விமான நிலையத்திலும் இதே நிலை காணப்பட்டது. பெங்களூர் வந்திறங்கிய பயணிகளுக்கு, தங்கள் இடங்களுக்குச் செல்ல டாக்ஸிகள் கிடைக்கவில்லை. காலை 8 மணி வரை இயக்கப்பட்ட டாக்ஸிகள், அதன்பிறகு நிறுத்தப்பட்டுவிட்டன.

கர்நாடக முதல்வர்

கன்னட அமைப்பினர் கைது

கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரின் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற கன்னட அமைப்பினர் சிலர் கைது செய்யப்பட்டார்கள். அதேபோல், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வீட்டை முற்றுகையிட முயன்ற 25 பேர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டார்கள்.

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் மிகக் குறைவான ஊழியர்களே பணிக்கு வந்திருந்தார்கள். வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணத்திருந்தார்கள்.

முழு அடைப்பை ஒட்டி, பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மைசூரில், விப்ரோ தகவல் தொழில்நுட்ப அலுவலகம் இன்று இயங்கிக் கொண்டிருந்த நிலையில் கன்னட அமைப்பினர் சிலர் அந்த அலுவலகத்துக்குள் புகுந்து பொருட்களை அடித்து சேதப்படுத்தினார்கள். ஊழியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று முழக்கமிட்டார்கள்.

மைசூர், மண்டியா உள்ளிட்ட மாவடங்களிலும் முழு அடைப்புப் போராட்டம் முழுமையாக இருந்தது.

கர்நாடக மனு 8-ல் விசாரணை

இதனிடையே, காவிரியில் தமிழ்நாட்டுக்கு அக்டோபர் 15 வரை தினசரி விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவரான பிரதமரின் உத்தரவை மாற்றியமைக்கக் கோரி, கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள் இருக்கிறது.

காவிரி ஆணைய உத்தரவை அமல்படுத்துமாறு செப்டம்பர் 28-ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க வேண்டும் அல்லது நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், அக்டோபர் 1 முதல் நான்கு மாதங்களுக்கு தமிழ்நாட்டின் தண்ணீர் தேவை 38 டிஎம்சி மட்டுமே என்று கர்நாடகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்துமாறு உத்தரவிடக் கோரி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் தனது அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள, தமிழ்நாட்டுக்கு சாதகமாக முடிவெடுத்துள்ளதாக, பெங்களூரில் போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் யெதியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியக் குழுவினர் ஆய்வு

இதனிடையே, தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் உள்ள நிலைமைகளை நேரில் கண்டறிய மத்திய நிபுணர் குழுவினர் இரு மாநிலங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டிலும் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் மத்திய அதிகாரிகள் இன்றும் ஆய்வு மேற்கொண்டனர். ஏற்கெனவே குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது போதிய தண்ணீர் இல்லாமல் சம்பா சாகுபடி பயிர்களும் வாடி வருகின்றன. தினசரி 2 டிஎம்சி தண்ணீர் கிடைக்காவிட்டால் சம்பா சாகுபடியும் வீணாகப் போய்விடும் என்று அதிகாரிகளிடம் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.