கர்நாடகத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 அக்டோபர், 2012 - 15:54 ஜிஎம்டி
காவிரி நதி

காவிரி நதி

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தத் தவறியதால், கர்நாடக அரசு நீதீமன்ற அவமதிப்புக் குற்றம் புரிந்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

அந்த உத்தரவை செயல்படுத்தத் தவறிய கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, தலைமைச் செயலர் உள்பட 7 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு கோரியுள்ளது.

கடந்த மாதம் 19-ம் தேதி பிரதமர் தலைமையில் நடந்த காவிரி நதிநீர் ஆணையம், தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 15 வரை தினசரி விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடுமாறு உத்தரவிட்டது. அதை கர்நாடகம் ஏற்க மறுத்ததால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழகம்.

கடந்த மாதம் 28-ம் தேதி இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், காவிரி ஆணையம் உத்தரவிட்டபடி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தெரிவித்தது. அதைத் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகம், கடந்த திங்கட்கிழமை இரவுடன் தண்ணீர் திறப்பதை நிறுத்திவிட்டது.

இதையடுத்து தமிழக அரசு, கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது. நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தவறிய கர்நாடக முதலமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அழைத்து, வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்ததற்காக அவர்களைத் தண்டிக்க வேண்டும் என தமிழகம் கோரியுள்ளது.

மேலும், ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டபடி அக்டோபர் 15 வரை தினசரி விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடவும், இடையில் தண்ணீர் விடுவதை நிறுத்தியதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டவும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தனது மனுவில் கோரியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை

தூண்டிவிடப்பட்ட போராட்டங்கள்

தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தான் தாக்கல் செய்த மனுவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதை நீதிமன்றம் 12-ம் தேதி வரை ஒத்திவைக்குமாறு கர்நாடகம் கோரியது. மேலும், செப்டம்பர் 28-ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரவில்லை. அப்படியானால், நீதிமன்ற உத்தரவை அவர்கள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அர்த்தம். ஆனால், கர்நாடகத்தில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் தூண்டிவிடப்பட்டன என தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

அக்டோபர் 8-ம் தேதி நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு,கர்நாடக முதலமைச்சர் உள்பட அந்த மாநிலத்தின் முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடுவது அன்று இரவோடு நிறுத்தப்படும் என்று அறிவித்தார்கள். அதன்படி, 8-ம் தேதி இரவு 7 மணியுடன் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது, நிறுத்தப்பட்டதாக தமிழகம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்று நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்திய அவர்கள், தண்டிக்கப்படாமல் விடப்பட்டால், அரசியல்வாதிகள் மற்றும் நிர்வாகிகள், தேசஒற்றுமையைவிட தாங்கள் விரும்பியபடி செயல்படுவதுதான் சரி என்று நினைத்தால், அதன் விளைவுகள் பெரும் ஒழுங்கின்மையை ஏற்படுத்தும், ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் கூட்டாட்சி முறை கேள்விக்குறியாக்கப்படும் என்று தமிழகம் கவலை வெளியிட்டுள்ளது.

இந்த மனு, வரும் வெள்ளிக்கிழமை, காவிரி தொடர்பான மற்ற மனுக்களுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே ஒரு நீதிமன்ற அவமதி்ப்பு

ஏற்கெனவே, தற்போதைய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, கர்நாடக முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டுக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தத் தவறியதற்காக, தமிழக அரசு அப்போதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அதன்மீது கடந்த 2002-ம் ஆண்ட அக்டோபர் 12-ம் தேதி உச்சநீதிமன்றம், எஸ்.எம். கிருஷ்ணா, அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் எச்.கே. பாடீல் மற்றும் அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அதுதொடர்பாக நீதிமன்றம் கருத்து வெளியிட்டபோது, சட்டம், ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருக்கும் நடவடிக்கையை முதலி்ல் நிறுத்த வேண்டும் என்றும், இதனால் நீங்கள் அரசியல் ஆதாயம் பெறுவதை அனுமதிக்க முடியாது என்றும் கண்டனம் தெரிவித்தது. பின்னர், கிருஷ்ணா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்கள் என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.