'நிலமற்ற ஏழைகளுக்கு நிலம்': இந்திய அரசு- ஏழைகள் இடையே ஒப்பந்தம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 அக்டோபர், 2012 - 10:23 ஜிஎம்டி
நிலமற்ற ஏழைகளின் நீண்ட பேரணி மத்திய பிரதேசத்திலிருந்து டில்லியை நோக்கி கடந்த வாரம் ஆரம்பித்தது

நிலமற்ற ஏழைகளின் நீண்ட பேரணி மத்திய பிரதேசத்திலிருந்து டில்லியை நோக்கி கடந்த வாரம் ஆரம்பித்தது

இந்தியாவில் நிலமற்ற ஏழை மக்கள் ஆயிரக்கணக்கில் பங்கெடுத்த தொடர் ஊர்வலப் போராட்டம், அரசுடன் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தம் ஒன்றை அடுத்து முடிவுக்கு வந்துள்ளது.

ஏழைகளுக்கு நிலங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக கிராமிய அபிவிருத்தித் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் போராட்டக்காரர்களை சந்தித்துள்ளார்.

போராட்டக்காரர்களுக்கும் அரசக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையின்படி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடியினத்தவர்களுக்கும் சொந்தமான நிலபுலங்களை பாதுகாப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கும்.

கடந்த வாரம் மத்திய பிரதேஷ் மாநிலத்திலிருந்து தொடங்கிய ஆர்ப்பாட்டக்காரர்களின் பேரணி அக்டோபர் மாதத்தின் முடிவில் தலைநகர் டில்லியை சென்றடைய இருந்தது.

போராட்டக்காரர்களை சந்தித்து நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்கும் அரசின் திட்டத்தை விபரிப்பதற்காக அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இன்று வியாழக்கிழமை ஆக்ராவுக்கு சென்றார்.

இந்தியாவில் 'கிராமங்களில் உள்ள ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் சிறிதளவு காணித்துண்டொன்றை' அரசின் இந்த திட்டம் உத்தரவாதப்படுத்தும்.

இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து செயற்படவுள்ளது.

இந்தத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்காக, அடுத்துவரும் 6 மாதங்களுக்குள் அரசின் தேசிய காணி சீர்திருத்தக் கொள்கைத் திட்டத்துக்கான வரைவு பொது விவாதத்துக்காக விடப்படவுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, அங்கு நிலம் தொடர்பான அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு உரியவை. இந்த நில விவகாரம் இந்தியாவில் பெரும் அரசியல் பிரச்சனையாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெரும் தொழில்முயற்சித் தேவைகளுக்காகவும் உட்கட்டமைப்பு வேலைகளுக்காகவும் மாநில அரசுகளுக்கு நிலம் பெருமளவில் தேவைப்படுகிறது. ஆனால் விவசாயிகளும் பழங்குடி மக்களும் தமது அடிப்படை வாழ்நிலங்கள் அழிக்கப்படுவதாக அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டில், உத்தர பிரதேச மாநிலத்தில் விவசாய நிலங்கள் சாலை மற்றும் தொழில் நிறுவனங்களை அமைப்பதற்காக அரசினால் சுவீகரிக்கப்பட்ட போது அங்குள்ள ஏழை விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வன்முறையான மோதல்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2009-ம் ஆண்டிலும் மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூரில், நானோ கார்( உலகின் விலைகுறைந்த கார்)தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கு டாட்டா குரூப் நிறுவனம் முன்னெடுத்த திட்டம் விவசாயிகளின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டமையும் நினைவுகூரத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.