கார்ட்டூனிஸ்ட்டுக்கு எதிரான தேசத்துரோகக் குற்றச்சாட்டு கைவிடப்பட்டது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 அக்டோபர், 2012 - 10:34 ஜிஎம்டி
தேசிய சின்னங்களை இழிவுபடுத்தியதாக கார்ட்டூனிஸ்ட் திரிவேதி கைதுசெய்யப்பட்டார்

தேசிய சின்னங்களை இழிவுபடுத்தியதாக கைதுசெய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட் திரிவேதி, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்தியாவில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட கேலிச்சித்திரக் கலைஞர் அசீம் திரிவேதிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த தேசத்துரோகக் குற்றச்சாட்டை மஹராஸ்டிரா மாநில அரசு கைவிட்டுள்ளது.

இந்தியாவில் அண்மைக்காலமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களை கருப்பொருளாக வைத்து கேலிச்சித்திரங்கள் வரைந்திருந்த கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டார்.

பொதுமக்கள் மத்தியில் எழுந்த பலத்த கண்டனங்களையும் எதிர்ப்பலைகளையும் அடுத்து, பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்தியாவின் அரசியலமைப்பையும் தேசிய சின்னத்தையும் நையாண்டி செய்து இழிவுபடுத்தும் விதமான கேலிச்சித்திரங்களை வரைந்ததாகவே அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால் கருத்துவெளியிடும் சுதந்திரத்துக்கு விழுந்த அடியாகவே இந்தக் கைதை இந்தியாவில் பலரும் விமர்சித்திருந்தார்கள்.

ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே முன்னெடுத்துவரும் போராட்ட இயக்கத்தின் நடவடிக்கைகளிலும் அசீம் திரிவேதி பங்கெடுத்துவருகிறார்.

இந்தியாவின் தேசிய சின்னத்தில் இருக்கின்ற மூன்று சிங்கங்களுக்குப் பதிலாக மூன்று ஓநாய்களை வரைந்து அவற்றின் வாய்களிலிருந்து இரத்தம் சொட்டுவதைப் போலவும் சின்னத்தின் அடியில், (எலும்புகளிடையே மண்டையோடு காணப்படும்) அபாய எச்சரிக்கை குறியீடுகளிடையே 'ஊழல் வாழ்க' என்ற வாசகத்தையும் பொறித்து தொடர் கேலிச்சித்திரங்களை திரிவேதி வரைந்திருந்தார்.

இன்னொரு கார்ட்டூனில் இந்திய நாடாளுமன்றம் 'பெரிய கழிப்பறை தொட்டியாக' வரையப்பட்டிருந்தது.

இந்த கேலிச்சித்திரங்கள் இந்தியாவின் தேசிய சின்னங்களை இழிவுபடுத்தியுள்ளதாகக் கூறி அசீம் திரிவேதியை காவல்துறையினர் கைதுசெய்திருந்தனர்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.