சல்மான் குர்ஷித், மனைவி மீதான ஊழல் விசாரணை ஆரம்பம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 அக்டோபர், 2012 - 10:33 ஜிஎம்டி
தம் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறு என்று சல்மான் குர்ஷித் மற்றும் அவரது மனைவி படங்களை காண்பித்தனர்.

தம் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்று சல்மான் குர்ஷித்தும் அவரது மனைவியும் தமது ஆதாரங்களை காண்பித்தனர்.

இந்தியாவின் சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் அவரது மனைவியும், அவர்கள் நடத்திவந்த உடல் வலுவிழந்தவர்களுக்கான தொண்டுநிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட அரச பணத்தில் 'சுருட்டி' விட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தொண்டுநிறுவனத்தின் அலுவலகங்களுக்கு சென்று விசாரணைகைள மேற்கொள்கின்ற உத்தர பிரதேச மாநில பொருளதார குற்ற விசாரணைப் பிரிவனர், அங்குள்ள ஆவணங்களையும் சோதனை செய்துவருகின்றனர்.

அமைச்சர் குர்ஷித் பதவி விலகவேண்டும் என்று ஊழல் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

ஆனால் தொலைக்காட்சி ஊடகங்களும் ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளர்களும் சுமத்தும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கமுடியாது என்று குர்ஷித் கூறிவருகிறார்.

சாகிர் ஹூசைன் ஞாபகார்த்த தொண்டுநிறுவனத்திற்கு சமூகநலத்துறை அமைச்சு ஒதுக்கிய 71 லட்சம் ரூபாய் நிதியை சல்மான் குர்ஷித்தும் அவரது மனைவியும் மோசடி செய்துவிட்டதாக ஆஜ் தாக் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

உத்தர் பிரதேச மாநிலத்தில் உள்ள 17 மாவட்டங்களில் உடல் வலுவிழந்தோருக்கான சக்கர வண்டிகளையும் காது கேளாதவர்களுக்கான செவிப்புலன் கருவிகளையும் வழங்குவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டது.

போலி கையெழுத்துக்கள், போலி ஆவணங்கள்

ஆனால் அரச பணியாளர்களின் போலியான கையெழுத்துக்களை போட்டும், போலியான சத்தியக் கடதாசிகளை வழங்கியும், இல்லாத முகாம்களை இருப்பதாகக் காட்டியும் இந்த நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குர்ஷித் தரப்பினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களில் எதனையுமே நிரூபிக்கமுடியாது என்று ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் சல்மான் குர்ஷித் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

உடல் வலுவிழந்தவர்களுக்கான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக காட்டும் படங்களையும் அமைச்சர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளார்.

ஆனால், குர்ஷித்தின் கருத்தை எதிர்த்து இன்று திங்கட்கிழமை கருத்துவெளியிட்டுள்ள ஊழல்எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர் மீது புதிய குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியுள்ளார்.

போலியான ஆட்களைக் காட்டி பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமைக்கு ஆதாரமாக தன்னிடம் ஆவணங்கள் இருப்பதாக கெஜ்ரிவால் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் காண்பித்தார்.

அமைச்சரினால் காண்பிக்கப்படும் பட்டியலில் உள்ள பெயர்களில் பலர் உண்மையிலேயே இல்லை என்றும் இன்னும் பலர் உடல்வலுவிழந்தவர்களே கிடையாது என்றும் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார்.

கடந்த பல மாதங்களாகவே பெரிய பெரிய ஊழல் விவகாரங்களை எதிர்கொண்டுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் இப்போது புதிதாக சந்தித்துள்ள பிரச்சனையே சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மீதான இந்த குற்றச்சாட்டுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.