அடுத்த வருடம் மின்வெட்டு கிடையாது என்கிறார் ஜெயலலிதா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 அக்டோபர், 2012 - 14:15 ஜிஎம்டி
முதல்வர் ஜெயலலிதா

முதல்வர் ஜெயலலிதா

தமிழகத்தில் அடுத்த மாதத்திலிருந்து மெல்ல மெல்ல மின் பற்றாக்குறை நீங்கி அடுத்த ஆண்டு இறுதியில் மின்வெட்டே இல்லை என்ற நிலை உருவாகும் என முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

நாம் தொடர்ந்து நேயர்களுக்குத் தெரிவித்து வருவதுபோல் சென்னை மாநகரைத் தவிர்த்த மற்ற அனைத்து பகுதிகளிலும் 15 மணிநேரம் வரை கூட மின்வெட்டு இருப்பதுடன், இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

தொழிற்சாலைகளில் உற்பத்தி வீழ்ச்சியுடன் மின்சாரத்தை நம்பும் தொழில்களும் முடங்குவதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் சிதைக்கப்படுகிறது. ஆங்காங்கே போராட்டங்கள் எழும் சூழலில், மின் துறை அமைச்சரும் தமிழக மின்வாரிய அதிகாரிகளும் மின் நிலை குறித்து ஊடகங்களிடம் அல்லது பொதுமக்கள் அமைப்புடன் விவாதிப்பதைத் தவிர்த்து வரும் நிலையில், முதல்வர் ஜெயலலிதா தனது ஜெயா தொலைக்காட்சி சானலில் இன்று வெள்ளிக்கிழமை தோன்றி மாநிலத்தில் மின்நிலை மோசமாக இருப்பதற்குக் காரணம் முந்தைய திமுக அரசும், உதவ முன்வராத மத்திய அரசும்தான் என்றார்.

ஆனால் இறுதியில் பல புதிய திட்டங்களின் விளைவாய் நிலை விரைவில் சரியாகும் என்றார் அவர்.

டில்லி அரசு தனக்குத் தேவையில்லை என்று ஒப்படைக்கவிருக்கும் மின்சாரத்தை தமிழ்நாட்டிற்கு முழுமையாகத் தந்துதவ வேண்டும் என்ற அவரது அண்மைக் கோரிக்கைக்கோ எப்படியும் மாநிலத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை வழங்கவேண்டுமென்ற தொடர்ச்சியான வலியுறுத்தலுக்கோ மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்று குறை கூறிய அவர், அதே நேரம் மற்ற மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெறுவதிலுள்ள சிக்கலையும் விளக்கி, அதற்கெல்லாம் மத்திய அரசே பொறுப்பென்றார்.

ஆனால் அவர் நம்பும் புதிய மின் திட்டங்கள் திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்கின்றனர் திமுகவினர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.