சித்திரங்களில்: 16ஆம் நூற்றாண்டு இந்தியா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 அக்டோபர், 2012 - 12:56 ஜிஎம்டி
 • இந்தியா பற்றி 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு முக்கியமான பயண நூல் தில்லியின் தேசிய ஆவணக் காப்பகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியா பற்றி எழுதப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்ற முதல் புத்தகம் என்றால் இத்தாலியரான லுடோவிகோ த வார்த்தெமா என்ற இந்த பயணி எழுதிய நூல்தான் என்று இந்த நூலின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் கூறுகின்றனர்.(படம் உதவி இத்தாலிய கலாச்சார மையம் மற்றும் இந்திய ஆவணக் காப்பகம்)
 • 1502ஆம் ஆண்டு தொடங்கி 1508ஆம் வரையில் இந்தியாவில் பயணித்தவர் த வார்த்தெமா ஆவார். 1510ஆம் ஆண்டு இவரின் இந்தியப் பயண நூல் முதலில் அச்சிடப்பட்டது. பின்னர் பல மொழிகளில் பல தடவைகளில் இந்நூல் பிரசுரமாகியுள்ளது. 1535ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூலுடைய பதிப்பொன்றின் முன் அட்டைப்படம் இதுவாகும்.
 • புத்தகத்தை எழுதியவர் அதிலே நிறைய படங்களையும் வரைந்திருந்தார். அந்த சமயத்தில் இந்தியாவில் நிலவிய சமூகப் பழக்கவழக்கங்கள் இப்புத்தகத்தில் தெளிவாக சித்தரிக்கப்பட்டும் வர்ணிக்கப்பட்டும் உள்ளன. கன்னட மக்களின் திருமணம் ஒன்றை இப்படம் காட்டுகிறது.
 • பொருளீட்டுதல், நாடு பிடித்தல் போன்ற உள்நோக்கம் எல்லாம் இல்லாமல் மனநிறைவுக்காக பயணித்தவர் த வார்த்தெமா. இறந்த கணவனின் சமாதியில் மனைவியையும் உயிரோடு புதைத்துவிடும் ஒரு வழக்கம் அக்காலத்தில் கோவேரிக் கழுதைகளில் பயணம் செய்த ஒரு கூட்டத்தினரிடையே காணப்பட்டதை இவர் ஆவணப்படுத்தியுள்ளார்.
 • த வார்த்தெமாவின் புத்தகம் பெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 50 மொழிகளில் மொழிமாற்றப்பட்டது. லத்தீனம், ஜெர்மன், பிரஞ்சு, ஸ்பானியம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இந்நூல் பிரசுரிக்கப்பட்டது. அக்காலத்தில் காம்பே ராஜ்ஜியமாக இருந்த இந்நாள் குஜராத்தில் விவசாயிகள் ஏர் உழுது தானியம் விதைப்பதை இப்படம் சித்தரிக்கிறது.
 • த வார்த்தெமாவுடைய நூலின் ஆரம்பப் பதிப்பில் இன்னும் அழியாமல் இருப்பது வெறும் இரண்டு பிரதிகள் மட்டுமே. ரோம் நகரில் ஒன்று உர்பானியாவில் ஒன்று என இரண்டு பிரதிகளுமே இத்தாலியில்தான் உள்ளன. கேம்பே ராஜ்ஜியத்தில் பெண்கள் நீராடுவதை இப்படத்தில் காணலாம்.
 • முதல் பிரசுரத்தில் இந்த புத்தகம் எப்படி இருந்ததோ அதே வடிவில் தற்போது தில்லியில் இது காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இந்த வடிவில் புத்தகத்தின் பிரதியை இத்தாலி இந்தியாவுக்கு வழங்கியிருந்தது. இந்தப் படத்தில் கர்நாடகத்தில் மாடு மேய்க்கும் சமூகத்தாரைக் காணலாம்.
 • த வார்த்தெமாவின் புத்தகத்தில் கரையோரத்து இந்தியா பற்றிய குறிப்புகள் மிகவும் முக்கியம், ஏனென்றால் அந்தக் காலத்திலேயே குறைந்த அளவிலாவது இவ்விடங்களில் ஐரோப்பிய பிரசன்னம் இருந்தது. கேம்பே ராஜ்ஜியத்தில் "செல்வச்செழிப்பு மிக்க வியாபாரிகளின் மனைவிகளை" இப்படம் காட்டுகிறது.
 • கேம்பே ராஜ்ஜிய மன்னரை அவருடைய படாபோபங்களோடு த வார்த்தெமா இப்படத்தில் வரைந்துள்ளார்.
 • த வார்த்தெமா இந்தியாவில் காண நேர்ந்த பல தரப்பு மக்களும் ஏராளமான ஆண் தெய்வங்களையும் பெண் தெய்வங்களையும் வழிபட்டதாக இந்நூல் குறிப்பிடுகிறது. "மலபாரில் சிறு தெய்வங்களை வழிபடும் நாயர்கள்" என்ற தலைப்பில் அமைந்துள்ளது இப்படம். இதிலே இருப்பவர்கள்தான் தற்போது தென்னிந்தியாவில் காணப்படும் நாயர்கள் என்று சரித்திர ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 • குன்றில் இருந்து கீழே குதித்து உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் ஒரு சமூகத்தில் காணப்பட்டதாக த வார்த்தெமாவின் புத்தகம் குறிப்பிடுகிறது. இப்படத்தில் சாது ஒருவரை த வார்த்தெமா வரைந்துள்ளார்.
 • கேம்பே ராஜ்ஜியத்தில் ஸராஃபோ எனப்படும் நாணய மாற்று வியாபாரி ஒருவரை சித்தரிக்கும் படம் இது. இவரது புத்தகம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த அதிலிருந்த சித்திரங்கள் பெரிதும் உதவின. 1517ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே காலமான த வார்த்தெமா, 300 ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த மார்க்கோ போலோவுக்கு பிறகு உலகின் புகழ்மிக்க பயண நூல் ஆசிரியராக விளங்கியவர் என்று கூறலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.