மின் தட்டுப்பாட்டுக்கு தமிழக அரசே பொறுப்பு: மத்திய அரசு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 நவம்பர், 2012 - 16:04 ஜிஎம்டி

டெல்லியில் உபரியாக இருக்கும் மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கு வழங்கக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், தென்னக மின் தொகுப்பு வழியாக கூடுதல் மின்சாரத்தை அனுப்புவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய மின் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் முன்பு இந்த வழக்குவியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் வஹன்வதி, தமிழ்நாடு கோரும் மின்சாரத்தை அனுப்புவதற்கு தென்னக மின் தொகுப்பில் போதிய திறன் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.

கடந்த 2011-ம் ஆண்டு டெல்லியிடம் உபரியாக இருந்த மின்சாரத்தை தமிழநாட்டுக்கு வழங்க மத்திய அரசு முயற்சித்ததாக அவர் கூறினார்.

அந்தத் தொகுப்பின் திறனை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், 2014-ம் ஆண்டுதான் அந்தப் பணிகள் நிறைவடையும் என்றும் வஹன்வதி தெரிவித்தார்.

மேலும், தற்போது நிலவும் மின் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தமிழ்நாடு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், கூடுதல் மினசாரத்தை பெறும் அளவுக்கு மின் தொகுப்பின் திறனை அவர்கள் அதிகரிக்கவில்லை என்றும் வஹன்வதி குறிப்பிட்டார்.

உபரி மின்சாரத்தை எட்டு மாநிலங்கள் கோருவதாகவும், மின் தொகுபபின் திரன் அடிப்படையில் அதை மத்திய அரசு பகிர்ந்தளிக்கும் என்றும் அட்டார்னி ஜெனரல் தெரிவித்தார்.

ஆனால், தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, மத்திய அரசின் வாதத்தை நிராகரித்தார். கடந்த ஆண்டு இதே மின் தொகுப்பு வழியாகத்தான் மின்சாரம் விநியோகிக்கப்பட்ட நிலையில், இப்போது மட்டும் எப்படி அது சாத்தியமில்லாமல் போகும் என்று கேள்வி எழுப்பினார். நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில்தான் உபரி மின்சாரம் வரும் என்றும், அதை தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

தேக்கி வைக்க முடியாது

மேலும், உபரி மின்சாரத்தை தனியாக ஒதுக்கி வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழக அரசு தொடர்ந்த வழக்கிற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்றும் ரோஹத்கி தெரிவித்தார்.

ஆனால், மின்சாரத்தை தேக்கி வைப்பது சாத்தியமில்லை என அட்டார்னி ஜெனரல் தெரிவித்தார்.

அந்த நேரத்தில், குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தாங்கள் இந்த விடயத்தை முடிவு செய்வதில் நிபுணர்கள் இல்லை என்றும், நிபுணர் குழுவிடமிருந்து இதுதொடர்பாக தொழில்நுட்ப விவரங்கள் தங்களுக்குத் தேவை என்றும் தெரிவித்தார்.

என்னென்ன காரணங்களால் தமிழ்நாட்டுக்கு உபரி மின்சாரத்தை வழங்க முடியாது என்பதை மனு மூலம் தாக்கல் செய்யுமாறு அட்டார்னி ஜெனரலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதே நேரத்தில், மத்திய மின் ஆணையம் இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், அடுத்த விசாரணை நவம்பர் 29-ம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தென்மேற்குப் பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தால், தமிழகம் இந்த ஆண்டு கடும் மின் பற்றாக்குறையில் தவிப்பதாகவும், தினசரி 12 மணி நேரம் வரை மின்வெட்டு இருப்பாதகவும் தமிழக அரசு தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் கடுமையான மின் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில், உபரி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.