'டெசோ தீர்மானங்களுக்கு ஐநாவில் ஆதரவு திரட்டுவோம்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 நவம்பர், 2012 - 16:54 ஜிஎம்டி
தமிழ் ஈழத்தை வலியுறுத்தி போராடியவர்களுக்கு ஆதரவாக 1980களில் டெசோ தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஈழத்தை வலியுறுத்தி போராடியவர்களுக்கு ஆதரவாக 1980களில் டெசோ தொடங்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் குரல் எழுப்பவேண்டுமென அந்தப் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் வற்புறுத்துவது என்று இன்று திங்கட்கிழமை டெசோ ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெசோ என அறியப்படும் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

அப்போது ஐ.நா ,மனித உரிமைகள் பேரவையில் உள்ள 47 நாடுகளின் இந்தியாவிற்கான தூதர்களை சந்தித்து டெசோ தீர்மானங்களுக்கு ஆதரவு திரட்டுவதென்று தீர்மானிக்கப்பட்டதாக, கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளுடனான மோதல்களின் இறுதிக் கட்டத்தின்போது ஐ.நா அதிகாரிகளை இலங்கையை விட்டு வெளியேற்றியதாக அண்மையில் கசிந்த ஐ.நா ஆய்வறிக்கையே கூறுவதை சுட்டிக்காட்டி, அத்தகைய செயலுக்காக அதிபர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இலங்கை அரசிற்கும் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றும் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

செய்தியாளர்களிடம் சிறிது நேரம் உரையாடிய கருணாநிதியிடம் இலங்கைப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் ஏதேனும் கொண்டுவரப்படுமா எனக்கேட்டபோது, அருகில் இருந்த திமுகவின் நாடாளுமன்ற அணித் தலைவர் டி.ஆர் பாலு, அப்படியான தீர்மானம் கொண்டுவரப்படும் என்றார்.

வேறு ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை கொண்டுவந்துள்ள மத்திய அரசின் நடவடிக்கையை திமுக ஆதரிக்காது என்றும் கருணாநிதி கூறியமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.