இந்திய கார்களுக்கு இலங்கையில் கடும் வரி: அதிர்ச்சியில் உற்பத்தியாளர்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 டிசம்பர், 2012 - 16:05 ஜிஎம்டி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கான சுங்க வரியை இலங்கை பலமடங்கு உயர்த்தியிருப்பது, இந்திய ஆட்டோமொபைல் தொழில் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, இலங்கை அரசுடன் பேசித் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என இந்திய அரசு அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர்.

இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு இலங்கை மிக முக்கியமான வாடிக்கையாளர் நாடு ஆகும்.

கடந்த ஆண்டு மட்டும் 100 மில்லியன் டாலர் அளவுக்கு இந்திய கார் மற்றும் பிற வாகனங்கள் இலங்கைக்கு ஏற்றுமதியாகியுள்ளன. அந்த நிலையில், இலங்கையின் திடீர் முடிவு, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பயணிகள் கார் மீதான சுங்க வரியை 73 சதமும், மூன்று சக்கர வாகனங்கள் மீதான வரியை 45 சதமும் உயர்த்தியது.

வர்த்தகப் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீதான வரியும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று பிபிசி தமிழோசையிடம் கருத்துத் தெரிவித்த இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநதி சுகோதோ சென், ''கடந்த ஏப்ரல் மாதம் பயணிகள் கார் மீதான இறக்குமதி சுங்க வரியை இலங்கை அரசு தீடீரென உயர்த்தியது. கடந்த நவம்பர் மாதம் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட பிற வாகனங்கள் மீதான வரியையும் உயர்த்திவிட்டது. இது இந்திய ஏற்றுமதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஜனவரியில் இலங்கையில் நடத்தத் திட்டமிட்டிருந்த ஆட்டோமொபைல் கண்காட்சியையும் ஒத்திவைத்திருக்கிறோம். காரணம், இலங்கையில் ஆட்டோமொபைல் முகவர்கள், இந்திய வாகனங்களை விற்க முடியாததால், அவற்றை ஏற்க மறுப்பதாக தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்’’, என்றார்.

இலங்கை அரசு, அன்னிய செலாவணியை அதகரிக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் சுகோதோ சென் கூறினார்.

அதே நேரத்தில், ஜப்பான் உள்பட மற்ற ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரியை இலங்கை அரசு குறைத்திருப்பது எப்படி என்று கருத்துத் தெரிவித்த சுகோதோ சென், ''எஃப்.டி.ஏ எனப்படும் தடையற்ற வர்த்தக உடன்பாட்டின்படி, இந்தியாவுடனான ஒப்பந்தத்தில், வாகனங்கள் சேர்க்கப்படவில்லை. ஆனால், ஜப்பான், சீனா போன்ற நாடுகளுடனான ஒப்பந்தங்களில் வாகனங்களையும் இலங்கை சேர்த்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய அரசின் வர்த்தகத்துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசியிருக்கிறோம். இலங்கையுடனான ஏற்றுமதி பாதிக்கப்பட்டால், ஆட்டோமொபைல் தொழில் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறியிருக்கிறோம்’’, என்றார்.

அதேபோல், சீன நிறுவனங்கள் இரண்டு கார் தயாரிப்பு ஆலைகளை அமைக்க இலங்கை அரசு அனுமதியளித்திருப்பதாக வந்திருக்கும் செய்திகள் தொடர்பாகவும் கவனிக்குமாறு இந்திய அதிகாரிகளைக் கோரியிருப்பதாக சுகோதோ சென் தெரிவித்தார்.

இலங்கைக்கு ஏற்கெனவே ஏற்றுமதியான இந்திய வாகனங்களை அந்நாட்டு முகவர்கள் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பவோ அல்லது வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுகோதோ சென் தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த இந்திய வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ராஜீவ் கெர், இது மிகவும் கவலையளிப்பதாகவும், ராஜாங்க ரீதியாக இலங்கை அரசுடன் பேசி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.