பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 டிசம்பர், 2012 - 16:57 ஜிஎம்டி
நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர் போராட்டங்கள் டில்லியில் நடக்கின்றன.

நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர் போராட்டங்கள் டில்லியில் நடக்கின்றன.

புது டெல்லியில், மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற போராட்டம் சனிக்கிழமையன்று மேலும் தீவிரமடைந்தது.

ஒரு கட்டத்தில், போலீசாரின் தடையை மீறிக்கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் குழாய்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கட்டுப்படுத்த முயன்றார்கள்.

ஆனால் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அதனால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

'நீதி வேண்டும், நீதி வேண்டும்' என்ற கோஷமிட்டிபடி அவர்கள் முன்னேற முயன்றார்கள். போலீசார் மீதும் போலீஸ் வாகனங்கள், பேருந்துகள் மீதும் கற்களையும் காலணிகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீசினார்கள்.

அதில், வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. அதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்ட முயன்றார்கள். அதில் போலீசார் உட்பட சிலர் காயமடைந்தார்கள்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போக்ககூடிய நிலை உருவானபோது, சிலரை போலீசார் அகற்றியதுடன் மேலும் சிலரை பிடித்துச் சென்றனர்.

போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் நடந்த இடத்தில் இருந்து சுமார் 150 அடி தூரத்தில்தான் குடியரசுத் தலைவர் மாளிகை உள்ளது. இரு புறங்களிலும் பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சகம், நிதி மற்றும் உள்துறை அமைச்சகங்கள் ஆகியவற்றைக் கொண்ட சவுத் பிளாக் மற்றும் நார்த் பிளாக் கட்டடங்கள் உள்ளன. அந்தப் பகுதியில் எப்போதும் அதிகபட்ச பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

இந்த மோதலுக்குப் பிறகும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த இடத்தை விட்டு அகலத் தயாராக இருக்கவில்லை. போலீசார் விரட்டியபோது ஓடிய அவர்கள் மீண்டும் அதே இடத்துக்கு வந்து போலீசார் அமைத்திருந்த தடுப்புகளுக்குப் பின்னால் அமர்ந்திருந்து தொடர்ந்து கோஷமிட்டனர்.

தூக்குத் தண்டனை

வல்லுறவில் ஈடுபட்டவரை தூக்கில் போட வேண்டும் என்ற கோரிக்கை நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் எழுப்பப்படுகிறது.

வல்லுறவில் ஈடுபட்டவரை தூக்கில் போட வேண்டும் என்ற கோரிக்கை நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் எழுப்பப்படுகிறது.

போலீசாரின் நடவடிக்கை மிக மெத்தனமாக இருப்பதாகவும், குற்றமிழைத்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டார்கள்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த நாள் முதல் டெல்லியிலும் நாட்டின் பிற நகரங்களிலும் போராட்டம் வலுத்து வருகிறது.

இன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

அதே நேரத்தில், பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் வகையில் கிரிமினல் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

அதிகபட்ச தண்டனை என்றால் அது மரண தண்டனையாக இருக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதுகுறித்து வெளிப்படையாத் தெரிவிக்க ஷிண்டே மறுத்துவிட்டார்.

அதேபோல், விசாரணை கமிஷன் சட்டத்தின்கீழ் இதுபோன்ற குற்றங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தி, தலைநகரில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான யோசனைகளைத் தெரிவிப்பதற்காக விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று உள்துறை சுஷில்குமார் ஷிண்டெ தெரிவித்தார்.

சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த நான்கைந்து காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை மெதுவாக தேறி வருவதாகவும் இன்று அவர் சில துளிகள் தண்ணீரும், ஆப்பிள் சாறும் அருந்தியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் நேற்றிரவு மாஜிஸ்திரேட்டிடம், நடந்த சம்பவம் குறித்து அவர் வாக்குமூலம் அளித்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாற்றுக் கருத்து

பாலியல் வல்லுறவு குறித்த வழக்குகளில் குறைந்த அளவினரே தண்டிக்கப்படுவதற்கு காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருக்கும் குறைபாடுகளே காரணம் என்று மதுரை வழக்கறிஞரும் செயற்பாட்டாளருமான நிர்மலா ராணி தமிழோசையிடம் தெரிவித்தார்.

'அரிதிலும் அரிதான' சம்பவங்களில் தான் மரண தண்டனை வழங்க முடியும் என்ற நடைமுறை இந்தியாவில் இருக்கும் நிலையில், பாலியல் வல்லுறவுக் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை என்று வந்தால், தண்டிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறையும் என்ற வாதத்தையும் அவர் முன்வைத்தார்.

குற்றவியல் நீதி நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குற்றம் செய்வோருக்கு தண்டனையை வழங்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.