பாலியல் வல்லுறவு: தில்லியில் ஆர்ப்பாட்டங்கள் தொடருகின்றன

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 டிசம்பர், 2012 - 16:46 ஜிஎம்டி

இந்தியத் தலைநகர் தில்லியில் நடந்த பாலியல் வல்லுறவு சம்பவம் தொடர்பில் இரண்டாவது நாளாக வன்முறை மிக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

23 வயது மருத்துவ மாணவி ஒருவர் சென்ற வாரம் ஓடும் பேருந்தில் ஆறு பேர் அடங்கிய கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், குற்றவாளிகளுக்கு தாமதமின்றி அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று இவ்வாறான குற்றச்செயல்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் கோரி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

ஞாயிறு காலை தில்லியின் மத்தியில் உள்ள இந்தியா கேட் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் வன்முறை வெடித்தது.

பொலிசார் மீது கற்களை எரிந்தும் அவர்களைக் கம்பியால் தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் இருந்தனர்.

ஒரு சில ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் பலத்தைப் பிரயோகித்து கலைந்துபோகவும் செய்திருந்தனர்.

ரைசினா ஹில்ஸ் நோக்கி செலும் ராஜ்பத் சாலையில் தடைகளை அமைத்து காவலுக்கு நின்ற பொலிசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்லெறிய அங்கும் மோதல் வெடித்தது.

சில விஷயமிகள் வேண்டுமென்றே வன்முறையைத் தூண்டுவதாக பொலிசார் கூறியிருந்தனர்.

ஆங்காங்கே வன்முறை நடந்திருந்தாலும் பெரும்பான்மையான ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாகவே இருந்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு வேறு உள்நோக்கம் உள்ளது என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

குடியரசுத் தலைவர் மாளிகைக்கு முன்பாக நேற்று சனியன்று பெரும் ஆர்ப்பாட்டம் நடந்திருந்த சூழலில், மத்திய தில்லியில் பொலிசார் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்திருந்தனர்.

ராம்லீலா மைதானம், ஜன்தர் மன்தர் சதுக்கம் ஆகிய இடங்களில் மட்டுமே மக்கள் கூட குடியும் என்று பொலிசார் தெரிவித்திருந்தனர்,

ஆனால் தடை உத்தரவுகளையும் மீறி பல இடங்களில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

நேற்றிரவு முழுக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தின் முன்னர் குழுயிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை சோனியா காந்தி சந்தித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

ஞாயிறு காலை அந்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் கலைந்துபோகச் செய்திருந்தனர்.

பாஜக கோரிக்கை

இதனிடையே பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களைத் தடுப்பது தொடர்பிலான சட்டங்கள் பற்றி விவாதிக்க நாடாளுமனறத்தில் விசேடக் கூட்டத்தொடர் ஒன்று நடத்தப்பட வேண்டும் என நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா மீண்டும் கோரியுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மோசமாகத் தோற்றுள்ளது என்பதற்கு தில்லியின் பாலியல் வல்லுறவுச் சம்பவமும் ஒரு சான்று என பாஜக சார்பாகப் பேசவல்ல பிரகாஷ் ஜாவேத்கர் கூறியுள்ளார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.