பாலியல் வல்லுறவுக்கு ஆளானவர் உயிருக்குப் போராடுகிறார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 டிசம்பர், 2012 - 11:25 ஜிஎம்டி
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை வழங்குகின்ற சிங்கப்பூர் மருத்துவமனை

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை வழங்குகின்ற சிங்கப்பூர் மருத்துவமனை

இந்தியாவில் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள தில்லி பாலியல் வல்லுறவுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் உயிருக்குப் போராடிவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பெண்ணின் பல அவயங்கள் செயலிழந்துவிட்டதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும், அவரது குடும்பத்தினருக்கும் அதுபற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அந்தப் பெண்ணின் அருகில் இருப்பதாகவும் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி மருத்துவர் கெல்வின் லோ தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண்ணின் மூளையிலும் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவரது நுரையீரல் மற்றும் அடிவயிற்றில் கிருமித் தொற்றுக்கள் இருப்பதாகவும், அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு அந்தப் பெண் உயிருக்குப் போராடி வருவதாகவும் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் கெல்வின் லோ தெரிவித்துள்ளார்.

டெல்லி மருத்துவமனையிலேயே அந்தப் பெண்ணுக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, குடலின் பெரும்பகுதி அகற்றப்பட்டுவிட்டது. தற்போது, பல்வேறு துறைகளின் சிறப்பு மருத்துவர்கள் அந்தப் பெண்ணை கவனித்து வருவதாகவும், அவரை ஸ்திரத்தன்மைக்குக் கொண்டுவர முயற்சித்து வருவதாகவும் சிங்கப்பூர் மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அரசியல் முடிவு அல்ல

இதனிடையே, அந்தப் பெண்ணை, மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல எடுக்கப்பட்ட முடிவு, மருத்துவக் காரணங்களால்தானே ஒழிய, அரசியல் காரணங்களுக்காக அல்ல என்று தெரிவித்துள்ளார் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷீத்.

டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்ஷித்தின் நடவடிக்கையால்தான், 23 வயதான அந்தப் பெண் சிங்கப்பூருக்கு மாற்றப்பட்டார் என்று வெளியான செய்திகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இது மருத்துவர்களால் எடுக்கப்பட்ட முடிவு என்றும், அதில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை என்றும் குர்ஷீத் தெரிவித்தார்.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு அந்தப் பெண்ணை கொண்டு செல்வது குறித்தும் மருத்துவர்கள் கண்டிப்பாக ஆலோசனை நடத்தியிருப்பார்கள். ஆனால், விமானப் பயண நேரத்தைக் கணக்கில் கொண்டு, சிங்கப்பூருக்குக் கொண்டு செல்ல முடிவு செய்திருப்பார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அந்த மாணவி, கடந்த 26-ம் தேதி நள்ளிரவு விமான ஆம்புன்ஸ் மூலம் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அந்தப் பெண்ணுக்கும் அவருக்குத் துணையாகச் செல்லும் உறவினர்களுக்கும் விரைவில் விசா, தங்குமிடம் உள்ளிட்ட உதவிகளைத்தான் அரசு செய்து கொடுத்ததாகவும் சல்மான் குர்ஷீத் தெரிவித்தார்.

கொந்தளிப்பைத் தூண்டிய சம்பவம்

அந்தப் பெண் மீதான தாக்குதல் இந்தியாவில் அலையலையாக வன்முறை மிக்க ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியிருந்தது.

பாலியல் வல்லுறவுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் வேண்டும் என்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியிருந்தனர்.

23 வயது மருத்துவ மாணவியான இப்பெண்ணை, ஒரு பேருந்தில் வைத்து பலர் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்ததோடு, இரும்புத் தடியால் தாக்கி, வாகனத்திலிருந்து வெளியில் தூக்கியெறிந்தும் இருந்தனர்.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.