பாலியல் குற்றங்களுக்கு டெல்லியில் விரைவு நீதிமன்றம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 ஜனவரி, 2013 - 16:43 ஜிஎம்டி

டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க டெல்லியில் விரைவு நீதிமன்றத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் புதன்கிழமை மாலை திறந்து வைத்தார்.

இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அவசியம் என்பதை உணர்ந்து, அரசு விழித்துக் கொண்டிருப்பதாகக் கூறிய தலைமை நீதிபதி, இந்த முடிவை வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.

விரைவாக நீதி கிடைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும், அதே நேரத்தில் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குற்றப்பத்திரிகை

இதனிடையே, பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய சட்டத்துக்கு, பாதிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவியின் பெண்ணின் பெயரை வைக்க வேண்டும் என்று, மத்திய இணை அமைச்சர் சஷி தரூர், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த கருத்து, புதிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு சட்டத்துக்கு அவரது பெயரைச் சூட்டுவதற்காக அந்தப் பெயரை வெளியிடுவதாக இருந்தால் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று அந்தப் பெண்ணின் தந்தையும், சகோதரரும் கூறியதாக பிடிஜ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், அவ்வாறு அந்தப் பெண்ணின் பெயரை வெளியிட ஏற்கனவே பல்வேறு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், எந்த ஒரு சட்டத்துக்கும் ஒரு தனி நபரின் பெயரை வைப்பது சாத்தயமில்லை என உள்துறை அமைச்சக அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, அந்தச் சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர். பாலியல் வன்முறை குற்றங்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தெற்கு டெல்லி சாகேத் விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞரும் ஆஜராக மாட்டோம் என்று சாகேத் வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் அறிவித்துள்ளனர்.

கரைந்துபோன கனவு

இதற்கிடையில், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு 13 நாள் போராட்டதுக்குப் பிறகு, சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த 23 வயது மாணவியின் குடும்பத்தினர், கங்கை நதியில் அவரது அஸ்தியைக் கரைத்த பிறகு, சொந்த ஊரான உத்தரப் பிரதேச மாநிலம் பாலியாவுக்குச் சென்றிருக்கிறார்கள்.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அந்தக் குடும்பம், நல்ல வாழ்க்கையைத் தேடி, 1983-ம் ஆண்டிலேயே டெல்லியில் குடியேறியது.

மருத்துவராகிவிட வேண்டும் என தீவிரமாக இருந்த தனது மகளுக்காகத்தான், கிராமத்தில் இருந்த நிலத்தை விற்றதாக தந்தை தெரிவித்தார்.

மரணப் படுக்கையில் படுத்திருந்த நேரத்திலும், தனது தாயிடம் மகள் மன்னிப்புக் கேட்டதை நினைவுபடுத்தி மனம் உருகினார் தந்தை.

தனது சகோதரி மிகவும் தைரியமானவர் என்றும், அவருக்கு இப்படி நடக்கும் என தாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை என்றும் மனம் உருகினார் அந்த மாணவியின் சகோதரர்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.