"புகாரைப் பதிய மறுக்கும் பொலிஸ்காரரை இடைநீக்கம் செய்ய தயங்கக்கூடாது"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 ஜனவரி, 2013 - 14:57 ஜிஎம்டி
இந்திய பொலிசார்

மக்கள் கொண்டுவருகின்ற புகாரை பதிவு செய்ய மறுக்கும் பொலிஸ்காரரை பதவி இடைநீக்கம் செய்யவும் தயங்கக்கூடாது என இந்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

தில்லியில் நடந்த காவல்துறை உயர்மட்டக் கூட்டம் ஒன்றில் உள்துறைச் செயலர் இவ்வாறு கூறினார்.

இந்தியாவில் பெண்களும், சமூகத்தின் பலவீனமானப் பிரிவைச் சேர்ந்த ஏழை மக்களும் காவல் நிலையம் சென்று புகார் கொடுப்பதென்பது, கொடுத்த புகாரின் நிலை என்ன என்று அறிந்துகொள்வது போன்றவை பெரும் சிரமமான விடயங்கள் என்று இருந்துவரும் நிலை மாற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் வல்லுறவு, பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றை அனுபவித்த பெண்கள், அது சம்பந்தமாக காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுப்பதென்பதே அவர்களுக்கு மிக கொடுமையான அனுபவமாக ஆகிவிடுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நமது சமுதாயம் பெண்களைக் காக்கத் தவறுகிறது என்பதை முதலில் அங்கீகரித்து, இந்த நிலை மாற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

வழக்கறிஞர் விஜயன் சட்ட விளக்கம்

"பொலிசார் புகார்களைப் பதிவதில் சட்டம் தெளிவாக உள்ளது"

மக்களின் புகார்களை பொலிசார் பதிய வேண்டும் என்பதில் சட்டம் தெளிவாக உள்ளது என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் சட்ட விளக்கம் வழங்கினார்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

நடந்த ஒரு குற்றச்செயல் தொடர்பாக காவல் நிலையம் சென்று மக்கள் புகார் கொடுப்பது சம்பந்தமாக இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் என்ன சொல்கிறது என்று மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் தமிழோசையிடம் விளக்கம் அளித்தார்.

கடுமையான தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றவியல் சட்டங்கள் பற்றி மக்கள் புகார் கொடுக்க வரும்போது அதனை ஆராய்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும், ஆரம்ப விசாரணைகளை நடத்துவது என்பதும் பொலிசாரின் கடமை என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று வழக்கறிஞர் விஜயன் கூறினார்.

ஒரு காவல் நிலையத்தில் பொலிஸ்காரர் புகாரை எடுத்துக்கொள்ள மறுக்கிறார் என்றால், உயரதிகாரியாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளருக்கு அதே புகாரை பாதிக்கப்பட்டவர் அனுப்பிவைக்க முடியும் என்றும், குற்றவியல் மாஜிஸ்திரேட்டிடம் தனிப்பட்ட ரீதியில் புகார் கொடுக்கவும் மக்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் வழங்கிய முழுமையான விளக்கங்களை மேலேயுள்ள பேட்டியில் கேட்கலாம்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.