காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 பிப்ரவரி, 2013 - 12:51 ஜிஎம்டி

காவிரி நதி நீரை நம்பித்தான் இவர்கள் விவசாயம்

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை இம்மாதம் 20 ஆம் தேதிக்கு முன்னர் இந்திய அரசு தனது அரசிதழில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று(திங்கட்கிழமை 4.2.13) உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வழங்கும் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவிரி கடைமடைப் பகுதியில் தண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிர்களைக் காப்பாற்ற கர்நாடகத்துக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென்றும், இந்திய மத்திய அரசின் அரசிதழில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு மனு தாக்கல் செய்தது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானாலும் இதுவரை அதை அரசிதழில் வெளியாடமல் இருந்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தனது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

அதே போல் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் தமிழகத்துக்கு காவிரியிலிருந்து தண்ணீரை திறந்து விடாத கர்நாடக அரசும் கண்டனத்துக்கு உள்ளானது.

மேலும் காவிரி கடைமடைப் பகுதியில் கருகும் பயிர்களை காப்பாற்றும் நோக்கில், தமிழ்நாடு உடனடியாக 2 டி எம் சி தண்ணீரை மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிட வேண்டும் எனவும், அதற்கு ஈடான தண்ணீர் அளவை கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் லோதா மற்றும் சலமேஸ்வர் ஆகியோர் உத்தரவிட்டனர்.

கர்நாடகம் மற்றும் தமிழகம் ஆகிய இரண்டு மாநிலத்தின் தண்ணீர் தேவை குறித்து அடுத்த இரண்டு நாட்களில் நீதிமன்றத்துக்கு ஒரு அறிக்கை அளிக்கும்படியும், மத்திய நீர்வள ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதே வேளை தமிழகத்தின் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பயிர்களில் நிலையை கண்டறிய மூன்று பேர் கொண்ட ஒரு குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

அந்த வல்லுநர் குழு எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னராக தமது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் காலக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.