மரண தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை 1455

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 பிப்ரவரி, 2013 - 18:01 ஜிஎம்டி
தூக்கு தண்டனையை எதிர்நோக்கும் முருகனும், தண்டனை குறைக்கப்பட்ட அவரது மனைவி நளினியும்ன்

தூக்கு தண்டனையை எதிர்நோக்கும் முருகனும், தண்டனை குறைக்கப்பட்ட அவரது மனைவி நளினியும்.

இந்தியாவில் 1455 பேர் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரங்களை மேற்கோள் காட்டி, ஆசிய மனித உரிமைகள் மையம் என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேநேரம் கடந்த 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 4,321 தூக்கு தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பளிக்கப்பட்டு, அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனைகளை அளிப்பதாகக் கூறுகிறது. இருந்தும் நாட்டில் மூன்று நாட்களுக்கு ஒருவருக்கு என்ற வகையில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு 132 பேருக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது.

மகாத்மா காந்தியை கொன்ற நாத்துராம் கோட்சேவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட போதிலும் அதனால் பிற அரசியல் கொலைகளை தடுத்து நிறுத்தமுடியவில்லை.

இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, பஞ்சாபின் முதல்வர் பியாந்த் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் லலித் மாகேன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டுகிறது.

குறையும் கொலைகள்

மரண தண்டனைகள் மூலமாக குற்றங்கள் தடுக்கப்படுகின்றன என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் கிடையாது என்றும் அது கூறுகிறது.

கடந்த 2001 ஆம் ஆண்டில் இந்தியாவில் 36,202 பேர் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளனர். 2011 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 34,305 ஆக குறைந்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 19 கோடியாக உயர்ந்தும் கொலைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரங்களில் இருந்து அறியக் கூடியதாக உள்ளது.

கடந்த 15 ஆண்டுகாலப் பகுதியில் 4 பேர் இந்தியாவில் தூக்கிலிடப்பட்டுள்ளனர் அவர்களில் இருவர் கடந்த நான்கு மாதங்களில் தூக்கிலிடப்பட்டனர்.

கே ஆர் நாராயணன், அப்துல் கலாம், பிரதீபா பாடில் ஆகிய மூன்று ஜனாதிபதிகளும் கருணை மனுக்களை தள்ளுபடி செய்வதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

பிரணாப் முகர்ஜி பதிவியேற்ற 7 மாதங்களில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உட்பட 7 பேரின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இவர்களில் இருவர் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர். மேலும் 9 பேரின் கருணை மனுக்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதிலும் சில பாரபட்சங்கள் காட்டப்படுவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

உலகில் 140 க்கும் அதிகமான நாடுகள் மரண தண்டனையை முற்றாக ஒழித்து விட்டன.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.